ADDED : ஜூலை 10, 2025 03:55 AM
* ஏற்றத்தாழ்வு வேணாம்!
கோல்டு சிட்டியில், 'இ- கேன்டீனில் மலிவு விலையில் ஒரு வேளைக்கு 500 பேருக்கு உணவு வழங்க திட்டம். ஆனால், 700 பேருக்கு மேல் சாப்பிட வராங்க. சாப்பிட வந்த பலரும் ஏமாந்ததா சொல்றாங்க. அங்கு தருவது 300 கிராம் அளவு சாப்பாடு.
இதில், அளவு கொஞ்சம் குறைவதாக சிலரோட குறைபாடு. இந்த கேன்டீனில் சில பிரமுகர்களும் சாப்பிடுவதா சொல்றாங்க. அசெம்பிளி மேடம் கூட வரிசையில் நின்னு, 10 ரூபா கொடுத்து டோக்கன் வாங்கி சாப்பிட்டாங்க. இப்படியொரு மக்கள் பிரதிநிதி கோல்டு சிட்டிக்கு கிடைச்சது வரபிரசாதம்னு, இதை பார்த்த கட்சி விசிறிகளுக்கு ஏகப்பட்ட சந்தோஷம்.
அவரோடு சாப்பாடு தட்டில் மட்டுமே வாழை இலை இருந்தது. மத்தவங்களுக்கு வாழை இலை இல்ல. இதில் ஏன் பாரபட்சம்னு தெரியல. சமத்துவம் காட்டுவதற்காக உட்கார்ந்து சாப்பிட்ட அவங்க, மத்தவங்க சாப்பாட்டு தட்டை கவனிக்கலயா?
வாரத்தில ரெண்டு நாளாவது இ.கேன்டீன் சாப்பாடு சாப்பிடும் முனிசி., பெரிய ஆபீசரு சுத்தம், சுகாதாரம் சீராக இருப்பதாக சொல்றாரு.
'உணவு மெனு'படி தான் சப்ளை செய்றாங்களாம். இதுவரையில் செம்ம வரவேற்பு என்கிறாங்க. இதில் அரசியல் இல்லை என்கிறாங்க. இந்த சர்ட்டிபிகேட்டை ஊர் மக்களும் சொன்னால் போதுமே.
------------
* அலட்சியம் காட்டலாமா?
அரசு மருத்துவமனைக்கு, கையில் காயம் ஏற்பட்ட சிறுவன் சிகிச்சைக்காக சென்றாரு. 30 ஆயிரம் ரூபாய் வரை செலவழித்தும் பிரயோஜனமே இல்லாமல், ஆப்பரேஷன் பேர்ல அந்த 12 வயது சிறுவனின் கையை துண்டிக்க நேரிட்டதாம். இந்த விவகாரம் பரபரப்பானது. இதுக்காக சிலர் போராட்டமும் நடத்தி ஆதங்கத்தை காட்டினாங்க.
அதே மருத்துவமனையில் மாரடைப்பு நோயாளிகளுக்கு ஆம்புலன்ஸ் வசதி இல்லாததால் ஒருவரோட உயிர் போனது. இறந்தவரின் உறவுக்காரங்க நியாயம் கேட்டு தகராறு செய்தாங்க. இந்த தகவலும் கூட மருத்துவமனை வளாகத்தில் மருவத்துவர்களின் அலட்சியத்தை வெளிபடுத்தினாங்க.
இது ஒருபுறம். மறுபுறம்; மூன்று நான்கு டாக்டர்களை சில பேர் தாக்கினாங்க என போலீசுக்கு புகார் போயிருக்கு. இந்த ரெண்டுமே நகரில் நியாயம் பேச வெச்சிருக்கு. உண்மை எது பொய்யெது, நியாயம் என்ன? உரிமை கேட்பது குற்றமா? உரிமை பேரில் சட்டத்தை தங்களது கையில் எடுத்துக் கொண்டார்களா? இதுக்கெல்லாம் சட்டம் தான் பதிலை சொல்லணுமா?
மனித நேயம் தொலைந்து போனதா? இப்படி பேசுறது மனித உரிமை சங்கங்கள்.
------
* வீணாகும் மக்கள் வரிப்பணம்
ஆ.பேட்டையிலும், ரா.பேட்டையிலும் முனிசி., கடைகள் சிதைந்து சின்னா பின்னமா, குட்டிச் சுவரா சில கடைகள் இருக்குது. இதை சீர்படுத்த முனிசி., நிர்வாகத்துக்கு அக்கறை இருப்பதாக தெரியல. முனிசி.,க்கு வருமானம் பெருக்கும் திட்டமும் இல்லை என்கிறாங்க.
பஸ் நிலையத்தில் அடுக்கு மாடி கட்டடங்களை கட்டி வாடகைக்கு விட பல லட்சங்களை செலவிட்டாங்க. 15 வருஷமா அந்த கடைகளை ஏலம் விடவே இல்லை. சும்மா பூட்டி வைக்கவா மக்கள் வரி பணம் பல லட்சங்களை செலவிட்டது வேஸ்ட் செய்யவா?
டிபாசிட் தொகையும் மாதாந்திர வாடகையும் 15 ஆண்டுகளில் பல லட்சம் ரூபாய் வருமானமா வந்து சேர்ந்திருக்கும். எதுக்காக யாருக்காக ஏலம் விடாமல் பூட்டி வெச்சிருக்காங்களோ?
இதைப்பற்றி மக்கள் பிரதிநிதிகளும் மாதந்தோறும் நடக்கும் கூட்டத்திலும் யாரும் கேட்டதாக தெரியல. இப்படி ஒரு வணிக வளாகம் ஏற்படுத்தி பூட்டி வெச்சிருக்கும் விபரமாச்சும் தெரியுமா? எதுக்காக இவங்க மக்கள் பிரதிநிதிகளாக தேர்வானாங்களோன்னு ஊரறிந்த ஜனங்க மத்தியில் பேச்சு இருக்குது.
------
* மாற்றாந்தாய் மனப்பான்மை!
கோல்டு சிட்டி முனிசி.,யில் தேசிய கம்பெனிகளின் சொத்து வரியை மட்டுமே வசூலிப்பதில் குறியாக இருக்கிறாங்க. ஆனா, 1 முதல் 17வது வார்டு வரையில், குடியிருக்கிற 50 ஆயிரம் வீடுகளுக்கு வரி நிர்ணயிக்க திட்டமே இல்லை.
அங்குள்ள வீடுகளுக்கு வரி வசூலிக்க அரசின் அனுமதி தான் அவசியம். அங்கு குடியிருக்கிற வீடுகளுக்கு பட்டா கிடையாது. எந்தவித பத்திரமும் கிடையாது.
ஓட்டுப்போட அடையாள அட்டை, ஆதார் கார்டு, ரேஷன் கார்டு, இத்தனையும் இங்கு வாழ்வதன் அடையாளம் காட்ட தான் முகவரிக்கு மட்டுமே பயனாக இந்த வீடுகள் இருக்குது.
இங்குள்ள பொது கழிப்பறையை துப்புரவு செய்வதில்லை. அதனால பூட்டியே வெச்சிருக்காங்க.
பினாயில், பூச்சிகொல்லி மருந்து தெளித்து, பல வருஷங்கள் கடந்துவிட்டது. கால்வாய்களில் சாக்கடை தேங்குகிறது.
இப்பகுதியை மாற்றாந்தாய் மனப்பான்மையில் நடத்துறாங்கன்னு பொதுவா பேசிக்கிறாங்க. ரா.பேட்டையில் பாதாள சாக்கடை திட்டம் ஏற்படுத்தினாங்க. ஆனால் வரி வசூலிக்காத 1 முதல் 17வது வரையிலான வார்டுகளில் இந்த திட்டமே கிடையாது.
இதை ஏன்னு கேட்க ஆள் இல்லையே!
***