ADDED : அக் 11, 2025 04:55 AM

பொதுவாகவே குழந்தைகளை காய்கறிகள் சாப்பிட வைப்பது கடினமான வேலை. காய்கறிகள் சாப்பிடாததால், அவர்களுக்கு சத்து குறைபாடு ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே, அவர்கள் விரும்பி சாப்பிடக்கூடிய வகையில் காய்கறிகளை சமைக்க வேண்டிய கட்டாயம் பெற்றோருக்கு உள்ளது. அவ்வகையில், அதிக குழந்தைகளுக்கு பிடிக்காத காய்கறியான கோவக்காயை சுவையாக எப்படி செய்வது என்பதை விளக்குகிறது இக்கட்டுரை.
எப்படி செய்வது? முதலில் பெரிய அளவிலான பாத்திரத்தில் தண்ணீரை ஊற்றி, அதில் அனைத்து கோவக்காயையும் கொட்டி நன்கு கழுவ வேண்டும். பின், கழுவிய கோவக்காயை நீளவாக்கில் வெட்டிக் கொள்ள வேண்டும். இதை ஒரு பாத்திரத்தில் போடவும். அத்துடன் மிளகாய்த்துாள், உப்பு, மஞ்சள் துாள், மிளகு துாள், அரிசி மாவு சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
பிறகு, ஒரு வாணலியில் தேங்காய் எண்ணெய்யை ஊற்றவும். இதில், மசாலா கலந்து வைத்துள்ள கோவக்காயை போடவும். லேசாக கிளறவும். பின், வாணலியை மூடி போட்டு மூடவும். சிறிது நேரம் கழித்து, மூடியை எடுத்துவிட்டு கோவக்காயின் பதத்தை பார்க்க வேண்டும். அப்போது, கோவக்காய் எண்ணெயிலேயே நன்றாக மொறு மொறு என்று ஆகும் வரை வதக்கி எடுத்தால், சுவையான கோவக்காய் மசாலா வறுவல் தயார்.
இதை தயிர் சாதத்துடன் தொட்டு சாப்பிடும்போது சுவை உண்மையிலே பிரமாதமாக இருக்கும்
- நமது நிருபர் - .