/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜனவரி முதல் வாரத்தில் இருந்து அரசு பேருந்துகள் வேலை நிறுத்தம்?: ஒரு பஸ் கூட ஓடாது என ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை
/
ஜனவரி முதல் வாரத்தில் இருந்து அரசு பேருந்துகள் வேலை நிறுத்தம்?: ஒரு பஸ் கூட ஓடாது என ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை
ஜனவரி முதல் வாரத்தில் இருந்து அரசு பேருந்துகள் வேலை நிறுத்தம்?: ஒரு பஸ் கூட ஓடாது என ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை
ஜனவரி முதல் வாரத்தில் இருந்து அரசு பேருந்துகள் வேலை நிறுத்தம்?: ஒரு பஸ் கூட ஓடாது என ஊழியர்கள் சங்கம் எச்சரிக்கை
ADDED : டிச 23, 2025 06:53 AM

கர்நாடகாவில், பி.எம்.டி.சி., எனும் பெங்களூரு மெட்ரோ பாலிட்டன் போக்குவரத்து கழகம், கே.எஸ்.ஆர்.டி.சி., எனும் கர்நாடக சாலை போக்குவரத்து கழகம், என்.டபிள்யூ.கே.எஸ்.ஆர்.டி.சி., எனும் வடகர்நாடக சாலை போக்குவரத்து க ழகம், கே.கே.ஆர்.டி.சி., எனும் கல்யாண கர்நாடக போக்குவரத்து கழகம் ஆகியவை இயங்கி வருகின்றன. இவற்றில், 1.15 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கோரிக்கைகள் கடந்த 2020 முதல் 2023 வரை, 38 மாதங்களாக நிலுவையில் உள்ள ஊதிய உயர்வை உடனடியாக வழங்குதல்; போக்குவரத்து ஊழியர்களை அரசு ஊழியர்களாக அங்கீகரித்து, சம ஊதியம் வழங்குதல்; போக்குவரத்து கழகங்களில் தனியார்மயமாக்கல், தொழிலாளர்கள் துன்புறுத்தலை முடிவுக்கு கொண்டு வருதல்; அனைத்து ஊழியர்களுக்கும் பணமில்லா மருத்துவ சிகிச்சை வசதி வழங்குதல்;
புதிய ஊதிய விதிதத்தை, 2024 ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்துதல்; தொழிலாளர்களுக்கான உணவக வசதி மேம்படுத்துதல்; 2020 மற்றும் 2021 வேலை நிறுத்தத்தின் போது, தொழிலாளர்கள் மீது தொடரப்பட்ட அனைத்து சட்ட வழக்குகளையும் திரும்ப பெறுதல்; மின்சார பஸ்களுக்கு கழகங்களின் ஓட்டுநர்களை நியமித்தல்; மின்சார பஸ் பராமரிப்பை, தனியார் ஒப்பந்ததாரர்களிடம் ஒப்படைக்கும் நடைமுறையை ரத்து செய்வது உட்பட பல கோரிக்கைகளை முன்வைத்து, ஆறு மாதங்களுக்கு முன் போராட்ட அறிவிப்பை வெளியிட்டனர்.
நீதிமன்றம் கண்டிப்பு இது தொடர்பாக, முதல்வர் சித்தராமையாவுடன் ஜூலை 7ல் தொழிற்சங்கங்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக தீர்வு எட்டப்படவில்லை. பஸ் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபடுவர் என்பதை யூகித்த மாநில அரசு, 'எஸ்மா' சட்டத்தை அமல்படுத்தியது. இதையடுத்து, 'டிச., 31ம் தேதி வரை அரசு ஊழியர்கள் யாரும் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது' என, எச்சரிக்கப்பட்டது.
இதையடுத்து, இவ்விவகாரம், மாநில உயர் நீதிமன்றத்திற்கு சென்றது. நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் இருக்கும்போதே, 'எஸ்மா' சட்டத்தை மீறி, மாநிலத்தில் சில இடங்களில் போக்குவரத்து ஊழியர்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட்டனர்.
மறுநாள் விசாரணையின்போது, ஸ்டிரைக் விஷயத்தை அறிந்த நீதிமன்றம், ஊழியர்களை கடுமையாக எச்சரித்தது. இதையடுத்து, அவர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.
இந்நிலையில், சமீபத்தில் சட்டசபை குளிர்கால கூட்டத்தொடர் முடிந்ததும், போக்குவரத்து ஊழியர்களின் கோரிக்கை குறித்து விவாதிக்கப்படும் என்று அரசு கூறியிருந்தது. ஆனால் அரசு, சங்கங்களை பேச்சுக்கு அழைக்கவில்லை. இந்நிலையில், மாநில அரசு பிறப்பித்த எஸ்மா சட்டம், இம்மாதம் 31ம் தேதியுடன் முடிவடைகிறது. இது தொடர்பாக, அனைத்து கர்நாடக சாலை போக்குவரத்து ஊழியர்கள் கூட்டமைப்பினர், பெங்களூரில் ஆலோசனை நடத்தினர்.
500 கோடி முறை கூட்டத்திற்கு பின், கூட்டமைப்பு பொது செயலர் ஜெயதேவராஜ் அர்ஸ் கூறியதாவது:
அரசு அளித்த வாக்குறுதிப்படி, நிலுவையில் உள்ள 38 மாத ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும். இல்லை என்றால், ஜனவரி முதல் வாரத்தில் ஸ்டிரைக் துவங்கினால், பொது மக்கள் பாதிக்கப்படுவர். டிப்போவில் இருந்து ஒரு பஸ் கூட வெளியே வராது. இதுவே அரசுக்கு நாங்கள் தரும் கடைசி எச்சரிக்கை.
பா.ஜ., ஆட்சியில், அரசு பஸ்களில் பெண்களுக்கு இலவசம் இல்லை. இதனால் குறைந்தளவில் பெண்கள் பயணித்து வந்தனர். ஆனால், காங்கிரஸ் அரசு இலவச பஸ் சேவை அறிவித்ததும், அதிகளவில் பெண்கள் பஸ்களில் பயணிக்கின்றனர். 'சக்தி' திட்டத்தின் கீழ், இதுவரை 500 கோடி முறைக்கு மேல் பெண்கள் பயணித்துள்ளனர். இதனால், எங்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில், பெங்களூரு உட்பட மாநிலத்தின் பல பஸ் நிலையங்களில், போக்குவரத்து ஊழியர்கள் எந்தவித ஆரவாரமுமின்றி, பொது மக்களிடம் வேலை நிறுத்த நோட்டீஸ்களை விநியோகித்து வருகின்றனர். அதில், 'எங்கள் கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை என்றால், ஸ்டிரைக்கை தவிர வேறு வழியில்லை' என, குறிப்பிட்டு உள்ளனர்.

