/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரில் சாலைகளை சுத்தம் செய்ய 46 இயந்திரங்கள் வாங்க அரசு முடிவு
/
பெங்களூரில் சாலைகளை சுத்தம் செய்ய 46 இயந்திரங்கள் வாங்க அரசு முடிவு
பெங்களூரில் சாலைகளை சுத்தம் செய்ய 46 இயந்திரங்கள் வாங்க அரசு முடிவு
பெங்களூரில் சாலைகளை சுத்தம் செய்ய 46 இயந்திரங்கள் வாங்க அரசு முடிவு
ADDED : நவ 14, 2025 05:24 AM

பெங்களூரு: பெங்களூரில் சாலைகளை சுத்தம் செய்ய, ஏழு ஆண்டு குத்தகைக்கு 46 இயந்திரங்களை 613.25 கோடி ரூபாய்க்கு வாங்க அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
முதல்வர் சித்தராமையா தலைமையில் விதான் சவுதாவில் நேற்று அமைச்சரவை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, சட்ட அமைச்சர் ஹெச்.கே.பாட்டீல் அளித்த பேட்டி:
கர்நாடகாவில் அடுத்த ஆண்டு பொது விடுமுறை தொடர்பாக அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டது. 20 பொது விடுமுறை மற்றும் 21 வரையறுக்கப்பட்ட விடுமுறை நாட்கள் கொண்ட பட்டியலுக்கு ஒப்புதல் கிடைத்தது.
பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில், குளிர்கால கூட்டத்தொடர் நடத்த தேதியை நிர்ணயிக்கும் அதிகாரம், கடந்த அமைச்சரவை கூட்டத்தில் முதல்வருக்கு வழங்கப்பட்டு இருந்தது. டிசம்பர் 8ம் தேதி முதல் 19ம் தேதி வரை கூட்டத்தொடர் நடத்த, இந்த கூட்டத்தில் முடிவு எடுத்து உள்ளோம்.
தாமதம் பா.ஜ., ஆட்சியில் கொரோனா காலத்தில் மருத்துவ உபகரணங்கள் வாங்கியதில் நடந்த முறைகேடு பற்றி, ஓய்வு பெற்ற நீதிபதி மைக்கேல் குன்ஹா தலைமையிலான குழு அளித்த அறிக்கையில் உள்ள அம்சங்களை விவாதிக்க, துணை முதல்வர் சிவகுமார் தலைமையில் அமைச்சரவை துணை குழு அமைக்கப்பட்டது.
இதுபோல, 'நைஸ்' சாலை திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக, உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் தலைமையில் அமைச்சரவை துணை குழு, பல்கலைக்கழக நிதி நிலையை மறு ஆய்வு செய்ய, துணை முதல்வர் சிவகுமார் தலைமையில் அமைச்சரவை குழு அமைக்கப்பட்டது. இந்த மூன்று குழுக்களும் அறிக்கையை சமர்பிக்க தாமதம் செய்கின்றன. இதுபற்றி விவாதம் நடந்தது.
பாராட்டு ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய பகுதியில் உள்ள பிரதான சாலைகள், துணை பிரதான சாலைகளை சுத்தம் செய்ய, ஏழு ஆண்டு குத்தகை அடிப்படையில் 613.25 கோடி ரூபாய் செலவில் 46 துப்புரவு இயந்திரங்களை வாங்க அனுமதி கிடைத்து உள்ளது.
மைசூரு அரசு விருந்தினர் மாளிகை ஊழியர்கள் குடியிருப்பு வளாகத்தில் 15 கோடி ரூபாய் செலவில், எம்.பி., - எம்.எல்.ஏ.,க்கள் தங்கும் கட்டடம் கட்டப்படும். கிரேட்டர் பெங்களூரு ஆணைய மசோதா 2025 ஐ அங்கீகரிக்க அமைச்சரவை முடிவு செய்து உள்ளது. மேற்கண்டவை உட்பட நிர்வாகரீதியாக மேற்கொள்ள வேண்டிய பல திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டன.
மேகதாது திட்டத்திற்கு எதிராக, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேகதாது திட்டத்தை செயல்படுத்த, அனைத்து நடவடிக்கைகளை மேற்கொள்ளும் முதல்வர், துணை முதல்வருக்கு அமைச்சரவை கூட்டத்தில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.

