/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பொருளாதார வளர்ச்சிக்கு அரசு ஊழியர்களே காரணம்
/
பொருளாதார வளர்ச்சிக்கு அரசு ஊழியர்களே காரணம்
ADDED : ஏப் 22, 2025 05:10 AM

பெங்களூரு: ''கர்நாடகா ஒரு முற்போக்கான மாநிலம். பெரும்பாலான அரசு ஊழியர்களின் நேர்மையான கடமை உணர்வு காரணமாக, மாநிலம் பொருளாதார முன்னேற்றம் அடைந்துள்ளது,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூரு விதான் சவுதா மாநாட்டு அரங்கில் நேற்று நடந்த பணியாளர், நிர்வாக சீர்திருத்தத் துறை, மாநில அரசு ஊழியர் சங்கம் ஏற்பாடு செய்திருந்த மாநில அரசு ஊழியர் தின விழாவை, முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார்.
பின், அவர் பேசியதாவது:
சமூகத்தின் நான்கு துாண்களான நிர்வாகம், சட்டசபை, நீதித்துறை, ஊடகங்களின் பணிகள் அரசியல் அமைப்பின் நோக்கத்தை நிறைவேற்றுவதாகும். அரசியல் அமைப்பின்படி, மதச்சார்பற்ற சமுதாயத்தை உருவாக்குவதும், ஜாதி சமத்துவமின்மையை ஒழிப்பதுமே இதன் நோக்கம்.
புத்தர், பசவண்ணர், காந்தி ஆகியோர் கூறியதை அம்பேத்கர் அரசியலமைப்பில் இணைத்து உள்ளார். அவர்கள் அனைவரும் விரும்பியபடி, நாம் அரசியல் அமைப்பை பின்பற்றி நமது கடமையை செய்ய வேண்டும்.
இன்றைய விருது பெற்றவர்கள், 5.5 லட்சம் அரசு ஊழியர்களுக்கு உத்வேகமாக இருக்க வேண்டும். விருது வென்றவர்களின் பொறுப்பு அதிகரித்துள்ளது. எனவே, அனைத்து அரசு ஊழியர்களும் தங்கள் கடமை உணர்வை அதிகரித்து, மக்களுக்கு திறம்பட சேவை செய்ய வேண்டும்.
கர்நாடகா ஒரு முற்போக்கான மாநிலம். பெரும்பாலான அரசு ஊழியர்களின் நேர்மையான கடமை உணர்வு காரணமாக, மாநிலம் பொருளாதார முன்னேற்றம் அடைந்துள்ளது. உங்களால் தான் சரக்கு சேவை வரி வசூலில், நாட்டிலேயே இரண்டாவது இடத்தில் உள்ளது.
பொருளாதாரம், சமூக சுதந்திரம் இல்லை என்றால், நமக்கு கிடைக்கும் அரசியல் சுதந்திரம் அர்த்தமற்றது.
இவ்வாறு அவர் பேசினார்.