'ஒரே மாநிலம் பல உலகங்கள்' முன்னுரிமை அளிக்க அரசு திட்டம்
'ஒரே மாநிலம் பல உலகங்கள்' முன்னுரிமை அளிக்க அரசு திட்டம்
ADDED : ஜூலை 22, 2026 11:28 PM

பெங்களூரு: கர்நாடக அரசின் சுற்றுலா துறை செயலராக நேற்று பொறுப்பேற்று கொண்ட ராம்பிரசாத் மனோகர், ''ஒரே மாநிலம் பல உலகங்கள்' என்ற முத்திரையை பதிக்க முன்னுரிமை அளிக்கப்படும்,'' என்று கூறினார்.
கே.பி.டி.சி.எல்., எனும் கர்நாடக மின் பகிர்மான கழக நிர்வாக இயக்குநராக பணியாற்றி வருபவர் ராம் பிரசாத் மனோகர். சமீபத்தில் சுற்றுலா துறை செயலர் பொறுப்பை கூடுதலாக கவனிக்கும்படி, அரசு உத்தரவிட்டிருந்தது.
இவர், ஏற்கனவே சுற்றுலா துறை இயக்குநராகவும், மாநில சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் நிர்வாக இயக்குநராகவும் பணியாற்றி உள்ளார். நேற்று முறைப்படி சுற்றுலா துறை செயலராக பதவியேற்ற பின், அவர் அளித்த பேட்டி:
முதல்வர் சிவகுமார் தலைமையில், சுற்றுலா துறை அமைச்சர் ஜார்ஜ் வழிகாட்டுதலின்படி, கர்நாடகாவை இந்தியாவின் மிகவும் விரும்பம் சுற்றுலா தலங்களில் ஒன்றாக மாற்ற, இத்துறை செயல்படும்.
சுற்றுலா உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், தனியார் முதலீகளை அதிகளவில் ஈர்க்கவும், நிலையான சுற்றுலாவை ஊக்குவிக்கவும், கர்நாடகாவின் கடலோர பாரம்பரியத்தை அறிய, பார்வையாளர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த அனுபவத்தை வழங்குவதில் கவனம் செலுத்தப்படும்.
முக்கிய சுற்றுலா திட்டங்கள் உரிய நேரத்தில் செயல்படுத்த, முதலீட்டாளர்களுக்கு உகந்த சூழல் உருவாக்கப்படும். மாநிலம் முழுதும் சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், கர்நாடகாவின் உலகளாவிய சுற்றுலா அடையாளமாக மாற்ற 'ஒரே மாநிலம் பல உலகங்கள்' என்ற முத்திரையை பதிக்க முன்னுரிமை அளிக்கப்படும். தேசிய, உலகளாவிய சுற்றுலா வரைபடத்தில் கர்நாடகாவை இடம் பெற வைக்க முயற்சிப்பதில் கவனம் செலுத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
