மாணவி சவுஜன்யா கொலை வழக்கு மறுவிசாரணைக்கு உத்தரவிட வாய்ப்பு
மாணவி சவுஜன்யா கொலை வழக்கு மறுவிசாரணைக்கு உத்தரவிட வாய்ப்பு
ADDED : ஜூலை 22, 2026 11:28 PM
- நமது நிருபர் -: மாணவி சவுஜன்யாவின் கொலை வழக்கை சரியாக விசாரிக்கவில்லை என்று சி.பி.ஐ.,யை, உச்ச நீதிமன்றம் சாடியுள்ளது. மறுவிசாரணைக்கு உத்தரவிடவும் வாய்ப்பு உள்ளது.
தட்சிண கன்னடாவின் தர்மஸ்தலா உஜ்ரே கிராமத்தை சேர்ந்த சாந்தப்ப கவுடா மகள் சவுஜன்யா, 17. கடந்த 2012ம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.
இந்த வழக்கை சி.ஐ.டி., முதலில் விசாரித்தது. பின், சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கில் சந்தோஷ் ராவ் என்பவர் கைது செய்யப்பட்டார்.
போதிய ஆதாரங்கள் இல்லாததால், கடந்த 2023ம் ஆண்டு சந்தோஷ் ராவ் விடுதலை செய்யப்பட்டார்.
சி.பி.ஐ., விசாரணை முறையாக நடக்கவில்லை என்றும்; உயர் அல்லது உச்ச நீதிமன்ற ஓய்வு நீதிபதி தலைமையில் மறுவிசாரணைக்கு உத்தரவிட கோரியும், சவுஜன்யாவின் தாய் குஸ்மாவதி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 2024ல் மனு செய்தார்.
'மறு விசாரணையால் எந்த பயனும் இல்லை' என்று கூறி, உயர் நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்தது.
இதனால் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இம்மனுவை நீதிபதிகள் சஞ்சய் குமார், சஞ்சீவ் சச்தேவா அமர்வு விசாரித்தது.
மனுதாரர், சி.பி.ஐ., மற்றும் கர்நாடக அரசு தரப்பு வாதங்கள் கேட்கப்பட்டன. மனு மீதான விசாரணை நேற்றுடன் நிறைவு பெற்றது.
மனு மீதான தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
அதே நேரம் சவுஜன்யா கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ.,யை, நீதிபதிகள் கடுமையாக சாடினர். 'சி.பி.ஐ., விசாரணை மிகவும் பலவீனமாக இருந்துள்ளது; சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரிக்கவில்லை; மனுதாரரிடம் விசாரணை நடத்தி தகவல் பெறவில்லை; சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரணை அதிகாரிகள் போல செயல்படாமல், தீர்ப்பு வழங்கும் நீதிபதி போல செயல்பட்டுள்ளனர்' என்று விமர்சித்தனர்.
நீதிபதிகள் கோபத்தை பார்க்கும் போது, மனு மீது தீர்ப்பு கூறுகையில், மறுவிசாரணைக்கு உத்தரவிட அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
