/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'கிரேட்டர் பெங்களூரு' ஆணையம் 5 புதிய மாநகராட்சிகளுடன் உதயம்
/
'கிரேட்டர் பெங்களூரு' ஆணையம் 5 புதிய மாநகராட்சிகளுடன் உதயம்
'கிரேட்டர் பெங்களூரு' ஆணையம் 5 புதிய மாநகராட்சிகளுடன் உதயம்
'கிரேட்டர் பெங்களூரு' ஆணையம் 5 புதிய மாநகராட்சிகளுடன் உதயம்
ADDED : செப் 03, 2025 01:09 AM

பெங்களூரு : பெங்களூரு மாநகராட்சியின் வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்து, ஐந்து புதிய மாநகராட்சிகளுடன் , 'கிரேட்டர் பெங்களூரு' ஆணையம் நேற்று முதல் அமலுக்கு வந்தது.
பெங்களூரில், 1.50 கோடி மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு ஏராளமான தொழிற்சாலைகள், சிறு நிறுவனங்கள், ஹெச்.ஏ.எல்., இஸ்ரோ, என முக்கியமான அலுவலகங்கள் உள்ளன.
இப்படி பல சிறப்பம்சங்களை கொண்ட பெங்களூரை பி.பி.எம்.பி., எனும் பெங்களூரு பெருநகர மெட்ரோபாலிட்டன் மாநகராட்சி நிர்வாகம், 2007ம் ஆண்டு முதல் நிர்வகித்து வந்தது.
பட்ஜெட் இந்த அமைப்பு, நகரத்தின் வளர்ச்சி மட்டுமின்றி சுகாதாரம், ஆரோக்கியம், கல்வி, சுற்றுலா தலம், நீர் நிலை, பூங்கா, மருத்துவமனை ஆகியவற்றை நிர்வகித்து வந்தது.
இது, இந்தியாவிலேயே நான்காவது பெரிய மாநகராட்சியாக இருந்தது. நடப்பு நிதியாண்டில், 19 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட்டை தாக்கல் செய்த்தது. இதிலிருந்து பி.பி.எம்.பி.,யின் முக்கியத்துவத்தை தெரிந்து கொள்ளலாம்.
இத்தனை சிறப்பு வாய்ந்த மாநகராட்சியை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்களே நிர்வகிப்பர். மொத்தம், 198 கவுன்சிலர்கள், எம்.எல்.ஏ., - எம்.எல்.சி., மற்றும் பலர் சேர்ந்து, மேயரை தேர்வு செய்வர்.
கவுன்சிலர்களுக்கான தேர்தல் கடைசியாக, 2015ம் ஆண்டு நடத்தப்பட்டது. இவர்களின் பதவிக்காலம் 2020டன் முடிவடைந்தது. ஆனால், ஐந்து ஆண்டுகள் ஆகியும் தேர்தல் நடத்தப்படவில்லை. இதனால், மாநகராட்சி கமிஷனர் மற்றும் அதிகாரிகளே பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகின்றனர்.
ஒப்புதல் இந்நிலையில், கடந்த ஆண்டு சட்டசபையில் துணை முதல்வர் சிவகுமார், ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணையத்துக்கான மசோதாவை தாக்கல் செய்தார்.
இது, பெங்களூரை ஐந்து மாநகராட்சிகளாக பிரித்து நிர்வாகம் செய்வதை வலியுறுத்தியது. இந்த மசோதாவிற்கு கடந்த மார்ச்சில் சட்டசபை, மேல்சபையில் ஒப்புதல் கிடைத்தது. ஏப்ரலில் கவர்னர் தாவர்சந்த் கெலாட் ஒப்புதல் அளித்தார்.
இதையடுத்து, கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தின் கீழ் வடக்கு, தெற்கு, கிழக்கு, மேற்கு, சென்ட்ரல் என ஐந்து மாநகராட்சிகள் பிரிக்கப்பட்டன.
ஜி.பி.ஏ.,வின் தலைவராக முதல்வர் சித்தராமையா, துணை தலைவராக சிவகுமார், கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி.,யாகி உள்ள மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.
தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் மணிவண்ணன், ராம் பிரசாத் மனோகர், ராஜேந்திர சோழன், தீபா சோழன், ராமச்சந்திரன், பெங்களூரு நகரை சேர்ந்த அமைச்சர்கள் ராமலிங்க ரெட்டி, ஜார்ஜ், பைரதி சுரேஷ், தினேஷ் குண்டுராவ், கிருஷ்ண பைரேகவுடா, பா.ஜ., எம்.பி.,க்கள் - பெங்களூரு சென்ட்ரல் மோகன், பெங்களூரு ரூரல் - மஞ்சுநாத், பெங்களூரு தெற்கு - தேஜஸ்வி சூர்யா, ராஜ்யசபா எம்.பி.,க்கள் காங்கிரசின் ஜெய்ராம் ரமேஷ், சந்திரசேகர், நாராயண கொரகப்பா, ஜக்கேஷ், லேகர்சிங் சிரேயா உட்பட 73 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.
மறுவரையறை இந்த புதிய ஐந்து மாநகராட்சிகளும் ஜி.பி.ஏ.,வின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும். ஐந்து மாநகராட்சிகளுக்கும் கமிஷனர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். பெங்களூரு மாநகராட்சியின் தலைமையகமே ஜி.பி.ஏ.,வின் தலைமையகமாக இருக்கும்.
இந்த ஆணையம் நேற்று முதல் அதிகாரப் பூர்வமாக செயல்பாட்டிற்கு வந்தது. இதனால், பெங்களூரு மாநகராட்சியின் வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
மாநகராட்சிகளின் எல்லைகளும் பிரிக்கப்பட்டு உள்ளன. ஏற்கனவே நடைமுறையில் இருந்த அதே, 198 வார்டுகள் நடைமுறையே தற்காலிகமாக தொடருகிறது.
ஐந்து மாநகராட்சிகளில் உள்ள வார்டுகளை மறுவரையறை செய்வது தொடர்பாக ஜி.பி.ஏ., தலைமை கமிஷனர் மஹேஸ்வர ராவ் தலைமையில் ஆணையத்தை மாநில அரசு நேற்று நியிமத்து உள்ளது.
இந்த ஆணையம் வரும் 23ம் தேதி வார்டுகள் மறுவரையறை குறித்த அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும். மாநில அரசு வரும் 26ம் தேதி வரைவு அறிக்கையை வெளியிடும். இதில் பரிந்துரை, ஆட்சேபனை தெரிவிக்க இரண்டு வாரம் அவகாசம் வழங்கப்படும்.
இதையடுத்து, ஆணையம் வார்டு மறுவரையறை குறித்த இறுதி அறிக்கையை அக்., 17ம் தேதி அரசிடம் சமர்ப்பிக்கும். இறுதியாக நவ., 11ம் தேதி ஐந்து மாநகராட்சிகளுக்கான வார்டுகள் வரையறை குறித்த இறுதி அறிவிப்பு வெளியாகும். அதுவரை தற்காலிக வார்டுகள் நடைமுறையே தொடரும்.