/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பல்லாரி சிறைக்கு தர்ஷனை மாற்ற கோரிய மனு ஒத்திவைப்பு
/
பல்லாரி சிறைக்கு தர்ஷனை மாற்ற கோரிய மனு ஒத்திவைப்பு
பல்லாரி சிறைக்கு தர்ஷனை மாற்ற கோரிய மனு ஒத்திவைப்பு
பல்லாரி சிறைக்கு தர்ஷனை மாற்ற கோரிய மனு ஒத்திவைப்பு
ADDED : செப் 03, 2025 01:06 AM

பெங்களூரு : ரசிகர் கொலை வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள தர்ஷன் உட்பட ஏழு பேரை, மாநிலத்தின் வேறு சிறைகளுக்கு மாற்றுவது தொடர்பான மனு மீதான விசாரணை இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சித்ரதுர்கா ரேணுகாசாமி கொலை வழக்கில், சிறையில் உள்ள நடிகர் தர்ஷன், பவித்ரா கவுடா உட்பட ஏழு பேரையும், ஜாமின் பெறுவதற்கு முன்பு இருந்த சிறைகளுக்கு மாற்றக் கோரி, 57வது செஷன்ஸ் நீதிமன்றத்தில், வக்கீல் பிரசன்ன குமார் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இம்மனு மீதான விசாரணை நேற்று வந்தது. அரசு தரப்பு வக்கீல் பிரசன்ன குமார் வாதிட்டதாவது:
குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் பாதுகாப்பு, நிர்வாக வசதியை கொண்டு அவர்களை இடம் மாற்ற வேண்டும். சிறை விதிகளின்படி, அவசர நேரம் அல்லது நிர்வாக ரீதியாக, சிறை கைதிகளை வேறு சிறைகளுக்கு மாற்ற, இன்ஸ்பெக்டர் ஜெனரலுக்கு அதிகாரம் உள்ளது.
குற்றஞ்சாட்டப்பட்டவர், குடும்பத்தினரையும், வக்கீலையும் பார்க்க சிரமமாக உள்ளது என்பதை ஏற்க முடியாது. மாநிலத்தின் அனைத்து சிறைச்சாலைகளிலும் காணொளிக் காட்சி வசதி உள்ளது.
சட்டத்தை விட உயர்ந்தவர்கள் யாரும் இல்லை. சிறையில் புகழ்பெற்ற ஒருவருக்கு வசதிகள் செய்து கொடுத்தால், சிறை நிர்வாகிகள் சஸ்பெண்ட் செய்யப்படுவர். தர்ஷன் உட்பட சிலர், சாட்சிகளை கலைக்க முயற்சித்துள்ளனர். எனவே, அவரை வேறு சிறைக்கு மாற்ற வேண்டும்.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
தர்ஷன் தரப்பு வக்கீல் வாதிட்டதாவது:
வழக்கு விஷயமாக, மனுதாரருடன் அவ்வப்போது வக்கீல்கள் ஆலோசனை செய்வர். இது காணொளிக்காட்சி மூலம் சாத்தியமில்லை. குற்றஞ்சாட்டப்பட்டவரின் குடும்பத்தினர் பெங்களூரில் வசிக்கின்றனர். அவரை பல்லாரி சிறைக்கு மாற்றுவது ஏற்புடையதல்ல.
பெங்களூரில் இருந்து 310 கி.மீ., தொலைவில் பல்லாரி உள்ளது. ஒவ்வொரு முறையும் விசாரணைக்கு இங்கு அழைத்து வருவது வாய்ப்பில்லை.
அதேவேளையில், அவருக்கான அடிப்படை வசதிகளை மறுக்கக் கூடாது. என் மனுதாரர் கேட்கும் படுக்கை, தலையணை, உணவு, ஷூ ஆகியவற்றை சிறை நிர்வாகத்தினர் சட்டப்படி வழங்கவில்லை. உச்சநீதிமன்றமும், அடிப்படை வசதிகள் கொடுக்கக் கூடாது என்று கூறவில்லை.
இவ்வாறு அவர் வாதிட்டார்.
இதுபோன்று குற்றஞ்சாப்பட்ட ஆறாவது நபர் ஜெகதீஷ் தரப்பு வக்கீலும், அவரது மனுதாரரை, ஷிவமொக்காவுக்கு மாற்ற எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் 14வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ள பிரதோஷ் தரப்பு வக்கீல் வாதிடுகையில், 'என் மனுதாரர் முதலில் பெலகாவி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பின், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் முறையிட்டு, மீண்டும் பெங்களூரு சிறைக்கு மாற்றப்பட்டார். எனவே, அவரை இடமாற்றம் செய்யக்கூடாது' என்றார்.
வாதங்களை கேட்ட நீதிமன்றம், விசாரணையை இன்று மாலை 4:00 மணிக்கு ஒத்திவைத்தது.