மளிகை பொருட்கள் தருவதாக மோசடி: பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை
மளிகை பொருட்கள் தருவதாக மோசடி: பொதுமக்களுக்கு போலீசார் எச்சரிக்கை
ADDED : அக் 01, 2026 02:15 AM
சென்னை: 'நாற்பது வகை மளிகைப் பொருட்கள், 2,299 ரூபாய்க்கு, உங்கள் வீடு தேடி வந்து தரப்படும் என, விளம்பரம் செய்து, மோசடி செய்யும் நபர்களிடம், ஏமாற வேண்டாம்' என, 'சைபர்' குற்றத்தடுப்பு பிரிவு போலீசார் எச்சரித்து உள்ளனர்.
இது குறித்து, அவர்கள் கூறியதாவது:
'ஆன்லைன்' வாயிலாக, பண மோசடி செய்யும் சைபர் குற்றவாளிகள், 'பேஸ்புக்' உள்ளிட்ட சமூக வலைதளங்களில், 2,299 ரூபாய்க்கு, 40 வகை மளிகைப் பொருட்களை, உங்கள் வீடு தேடி வந்து தருகிறோம் என, விளம்பரம் செய்கின்றனர். அதில், அவர்கள் கொடுத்துள்ள இணைப்பை தொட்டதும், சம்பந்தப்பட்டவரின் எண், 'வாட்ஸாப்' குழுவில் இணைக்கப் படுகிறது.
அக்குழுவில் ஏற்கனவே இருக்கும் மோசடி நபர்களின் கூட்டாளிகள், குறைந்த விலையில், மளிகை பொருட்கள் தங்கள் வீடு தேடி வந்தது போல், படங்களை வெளியிட்டு, புதிதாக இணைந்தவர்களிடம் நம்பிக்கையை ஏற்படுத்துகின்றனர்.
அதை பார்த்து வியக்கும் பொதுமக்கள், சம்பந்தப்பட்ட வாட்ஸாப் குழுவில் தெரிவிக்கப்படும், பரிசு மழையை நம்பி, 2,299 ரூபாய் செலுத்தி ஏமாறுகின்றனர். இத்தகைய சைபர் குற்றவாளிகளின் மோசடி வலையில், இனியும் பொது மக்கள் விழ வேண்டாம் .
சமூக வலைதளங்களில் செய்யப்படும், போலி விளம்பரங்களை நம்பி, பொது மக்கள் ஏமாற வேண்டாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
