ADDED : செப் 30, 2025 05:29 AM
மை சூ ரு தசராவை ஒட்டி அக்டோபர் 1, 2ம் தேதிகளில், மைசூரு பன்னிமண்டபத்தில் உள்ள தீப்பந்தம் கிரவுண்டில் ட்ரோன் ஷோ நடக்க உள்ளது. இதை சாமுண்டீஸ்வரி மின்சார விநியோக கழகம் நடத்துகிறது. இதற்கான ஒத்திகை நேற்று முன்தினமும், நேற்றும் நடந்தது. இம்முறை 3,000 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட உள்ளன.
ஒத்திகை நிகழ்ச்சியில் புலி வடிவமைப்பு ட்ரோன்களால் உருவாக்கப்பட்டது. இந்த புலி வடிவ ட்ரோன் உருவமைப்பில் 2,983 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. இது காண்போரை பிரமிப்படைய செய்தது.
இது குறித்து சாமுண்டீஸ்வரி மின் விநியோக கழக நிர்வாக இயக்குநர் முனிகோபால் ராஜு கூறியதாவது:
இந்த ஆண்டு ட்ரோன் ஷோவில், மறக்க முடியாத அனுபவங்கள் காத்திருக்கின்றன. இந்த புலி வடிவத்தை செய்வதற்கு 2,983 ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. அதிக ட்ரோன்களை பயன்படுத்தியதற்காக, கின்னஸ் உலக சாதனையிலும் இடம் பெற உள்ளது.
இந்த சாதனை, ட்ரோன் ஷோவில் ஈடுபட்ட அனைத்து கலைஞர்களின் உழைப்புக்கு கிடைத்த வெற்றி. ட்ரோன்களை இயக்குவதற்கு உதவுவதற்காக பிரிட்டனில் இருந்து ஒரு குழு வந்துள்ளது.
அனைவரும் ட்ரோன் ஷோ வை உற்சாகத்துடன் கண்டு களியுங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -