/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அக்., 9ல் ஹாசனாம்பா கோவில் திறப்பு
/
அக்., 9ல் ஹாசனாம்பா கோவில் திறப்பு
ADDED : அக் 04, 2025 11:10 PM

ஹாசன்:ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே திறக்கப்படும், வரலாற்று பிரசித்தி பெற்ற ஹாசனாம்பா கோவில், வரும் 9ம் தேதி திறக்கப்படுகிறது. 23ம் தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
இதுதொடர்பாக, கோவில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை:
இம்முறை ஹாசனாம்பா உத்சவம் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இதற்கான முன்னேற்பாடுகள் நடக்கின்றன. ஹாசனாம்பாவை தரிசிப்பதுடன், சுற்றுலா பேக்கேஜ், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும். வரும் 9ம் தேதி கோவில் நடை திறக்கப்படும். 23ம் தேதி வரை ஹாசனாம்பாவை தரிசிக்க அனுமதி இருக்கும்.
கோவில் உத்சவம் குறித்து, மாவட்ட பொறுப்பு அமைச்சர் கிருஷ்ண பைரேகவுடா , மாவட்ட கலெக்டர் லதா குமாரி ஏற்கனவே ஆலோசனை நடத்தி, உத்தரவுகள் பிறப்பித்துள்ளனர். கோவிலுக்கு பெயின்ட் அடிக்கும் பணிகள் நடக்கின்றன. அழைப்பிதழ் அச்சிடப்படுகின்றன.
ஹாசன் நகர் முழுவதும், மின் விளக்கு அலங்காரம், எல்.இ.டி., திரைகள்பொருத்துவது,சாலைப் பள்ளங்களை மூடுவது, கழிப்பறைகள் கட்டுவது, குடிநீர் வசதி, பேரிகேட் பொருத்துவது என, அனைத்துப் பணிகளும் மும்முரமாக நடக்கின்றன. கடந்தாண்டு 20 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஹாசனாம்பாவை தரிசிக்க வந்தனர். இம்முறை எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கிறோம்.
சிறப்பு தரிசனத்துக்கு வரும் பக்தர்களுக்கு 300, 1,000 ரூபாய் பாஸ் வசதி செய்யப்பட்டுள்ளது. இப்போது தான் முதன் முறையாக, வி.ஐ.பி., மற்றும் வி.வி.ஐ.பி., பாஸ்கள் ரத்து செய்யப்பட்டு, கோல்டு பாஸ் நடைமுறை கொண்டு வரப்படுகிறது. ஒரு பாஸில் ஒருவர் மட்டுமே, ஹாசனாம்பிகாவை தரிசிக்க அனுமதிக்கப்படுவர்.
கோவிலுக்கு வரும் மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகளை நேரடியாக தரிசனத்துக்கு அழைத்துச் செல்ல வசதி செய்யப்பட்டுள்ளது. நீண்டநேரம் வரிசையில் வரும் பக்தர்களின் வசதிக்காக, மின் விசிறி, மூலஸ்தானம் முன், ஏ.சி., வசதி செய்யப்படுகிறது.
குடிநீர், மோர் வழங்கப்படும். கோவில் உட்புறமும், வெளிப்புறமும் அழகாக பூ அலங்காரம் செய்யப்படுகிறது. முதல் நாளன்று ஹாசனாம்பாவை தரிசிக்க அனுமதி இருக்காது.
நடைதிறந்த பின், துப்புரவு செய்யப்படும். மறுநாள் அதிகாலை 5:00 மணி முதல், தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுவர். பக்தர்களின் பாதுகாப்புக்காக, கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகின்றன. பலத்த போலீஸ் பாதுகாப்பும் இருக்கும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.