சொந்த செலவில் செயற்கை மழை ஹாவேரி எம்.எல்.ஏ.,க்கள் முடிவு
சொந்த செலவில் செயற்கை மழை ஹாவேரி எம்.எல்.ஏ.,க்கள் முடிவு
ADDED : ஜூலை 03, 2026 10:23 PM

ஹாவேரி: ஹாவேரி மாவட்டத்தில் தங்கள் சொந்த செலவில் செயற்கை மழை பெய்ய வைக்க, ஆறு எம்.எல்.ஏ.,க்கள் அதிரடி முடிவு செய்துள்ளனர்.
கர்நாடகாவில் இந்த ஆண்டு மழை பொழிவு குறைவாக உள்ளது. 'அணையின் நீரை நம்பி பயிர்களை பயிரிட வேண்டாம்' என, விவசாயிகளுக்கு, முதல்வர் சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்நிலையில், ஹாவேரி மாவட்டத்தின் ஹாவேரி, ஹனகல், ஷிகாவி, பேடகி, ஹிரேகெரூர், ராணிபென்னுார் ஆகிய ஆறு தொகுதிகளின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்கள், ஹாவேரி மாவட்டத்தில், மேக விதைப்பு மூலம் தங்கள் சொந்த செலவில், செயற்கை மழை பெய்ய வைக்க திட்டமிட்டுள்ளனர்.
ராணிபென்னுார் எம்.எல்.ஏ., பிரகாஷ் கோலிவாட் கூறுகையில், ''ஹாவேரி மாவட்ட விவசாயிகள் நலனை கருதி, மாவட்டம் முழுதும் மேக விதைப்பு மூலம் செயற்கை மழை பெய்ய வைக்க திட்டமிட்டு உள்ளோம். இதற்கு மத்திய அரசிடம் இருந்து ஒப்புதல் கிடைத்து உள்ளது.
''இந்த பணியில் ஈடுபடும் விமானம் ஹூப்பள்ளிக்கு வந்து விட்டது. நாளை மற்றும் நாளை மறுநாள் அந்த விமானிகளுக்கு பயிற்சி அளிக்கப்படும். வரும் 7ம் தேதியில் இருந்து, 9ம் தேதி வரை, செயற்கை மழை பெய்ய வைக்க திட்டமிட்டுள்ளோம். வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கைக்காக காத்து உள்ளோம்,'' என்றார்.
