/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கூட்ட நெரிசலில் 11 பேர் இறந்த வழக்கில் நாளை அறிக்கை தாக்கல்: ஐகோர்ட் உத்தரவு
/
கூட்ட நெரிசலில் 11 பேர் இறந்த வழக்கில் நாளை அறிக்கை தாக்கல்: ஐகோர்ட் உத்தரவு
கூட்ட நெரிசலில் 11 பேர் இறந்த வழக்கில் நாளை அறிக்கை தாக்கல்: ஐகோர்ட் உத்தரவு
கூட்ட நெரிசலில் 11 பேர் இறந்த வழக்கில் நாளை அறிக்கை தாக்கல்: ஐகோர்ட் உத்தரவு
ADDED : ஜூன் 11, 2025 08:12 AM
பெங்களூரு : சின்னசாமி மைதானம் முன் கூட்ட நெரிசலில், 11 பேர் இறந்த சம்பவம் குறித்த விசாரணை அறிக்கையை சீலிடப்பட்ட கவரில் நாளை தாக்கல் செய்யும்படி அரசுக்கு, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுஉள்ளது.
பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானம் முன், கடந்த 4ம் தேதி ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து பத்திரிகைகளில் வந்த செய்திகள் அடிப்படையில் உயர் நீதிமன்றம், கடந்த 5ம் தேதி தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்தது. பொறுப்பு தலைமை நீதிபதி காமேஸ்வர் ராவ், நீதிபதி சி.எம்.ஜோஷி அமர்வு விசாரித்தது.
கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவர்களுக்கு அளிக்கப்பட்ட முதலுதவி சிகிச்சை என்ன, காயம் அடைந்தவர்கள் சரியான நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனரா என்பது உட்பட ஒன்பது கேள்விகளை அரசுக்கு எழுப்பினர்.
தங்கள் எழுப்பிய கேள்விகளுக்கும், அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது பற்றியும் 10ம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டுஇருந்தனர்.
பதறிய அரசு
நேற்று விசாரணை துவங்கியதும், அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி, ''நீதிமன்றத்தில் அரசு தரப்பில் இன்னும் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை.
ஓய்வு பெற்ற நீதிபதி ஜான் மைக்கேல் குன்ஹா தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. போலீஸ் கமிஷனர் உட்பட ஐந்து போலீஸ் அதிகாரிகள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டு உள்ளனர். ஆர்.சி.பி., நிர்வாகம், டி.என்.ஏ., நிறுவனத்தினர் ஜாமின் மனு மீது விசாரணை நடக்கிறது,'' என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், 'எங்கள் உத்தரவுக்கு பதில் அளிக்க மாட்டோம் என்று சொல்ல வருகிறீர்களா?' என்று கேள்வி எழுப்பினர்.
இந்த கேள்வியால் பதறிய அட்வகேட் ஜெனரல், ''சார் நான் அப்படி கூறவில்லை. அறிக்கை தாக்கல் செய்வதில் சில சிக்கல்கள் உள்ளன,'' என்றார்.
மீண்டும் குறுக்கிட்ட நீதிபதிகள், 'என்ன பிரச்னை உங்களுக்கு?' என்றனர்.
''இந்த வழக்கு குறித்து வெளிப்படையாக பேசுவது விசாரணைக்கு பாதிப்பு ஏற்படுத்தும். விசாரணை அறிக்கை வந்து விடட்டும். அறிக்கை தாக்கல் செய்ய ஒரு மாத அவகாசம் வழங்க வேண்டும்,'' என, அட்வகேட் ஜெனரல் கூறினார்.
'வெளிப்படையாக பேசுவது உங்களுக்கு பாதிப்பு என்றால், 'சீல்' வைக்கப்பட்ட கவரில் அறிக்கையை 12ம் தேதி சமர்ப்பியுங்கள்' என கூறி, விசாரணையை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
அவகாசம்
இதற்கிடையில், 11 பேர் இறந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஆர்.சி.பி., மார்க்கெட்டிங் பிரிவு தலைவர் நிகில் சோசலே, டி.என்.ஏ., நிறுவனத்தின் சுனில் மேத்யூ, கிரண், சமந்த் ஆகியோர் தங்களுக்கு ஜாமின் கேட்டும், வழக்கை ரத்து செய்ய கோரியும் தாக்கல் செய்த மனுவை, உயர் நீதிமன்ற நீதிபதி கிருஷ்ணகுமார் நேற்று விசாரித்தார்.
அரசு சார்பில் அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி வாதிடுகையில், ''மனுதாரர்கள் மீதான குற்றச்சாட்டு குறித்து விரிவாக வாதிட வேண்டும். இவர்களை கைது செய்ய போலீஸ் அதிகாரிகள் இரவு, பகலாக பணியாற்றி உள்ளனர். அனைத்து விபரங்களையும் நீதிமன்றம் முன் சமர்ப்பிக்க அவகாசம் வேண்டும்,'' என்றார்.
மனுதாரர்கள் தரப்பு வக்கீல் சந்தேஷ் சவுதா வாதிடுகையில், ''மனுதாரர்கள் நான்கு பேரும் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
''விசாரணைக்கு ஆஜராக அவர்களுக்கு நோட்டீஸ் கொடுக்கவில்லை. முதல்வரின் உத்தரவால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது உத்தரவு பிறப்பிக்க முதல்வருக்கு அதிகாரம் உள்ளதா? இதில் அரசியல் நடந்துள்ளது,'' என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை இன்று ஒத்திவைத்தார்.
காவல் மனு
இதற்கிடையில், கைதாகி சிறையில் இருக்கும் நான்கு பேரையும், தங்கள் காவலில் எடுத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சி.ஐ.டி., மனு தாக்கல் செய்தது. அந்த மனு மீது நேற்று விசாரணை நடந்தது.
விசாரணைக்கு ஆஜரான மனுதாரர்கள் தரப்பு வக்கீல் சந்தேஷ் சவுதா, ''மனுதாரர்கள் ஜாமின் மனு மீது உயர் நீதிமன்றத்தில் விசாரணை நடக்கிறது. இந்த நேரத்தில் நான்கு பேரையும் தங்கள் காவலில் எடுக்க சி.ஐ.டி., அனுமதி கேட்பது சரியல்ல,'' என்று கூறினார்.
அரசு தரப்பு வக்கீல் ஜெகதீஷ் வாதிடுகையில், ''குற்றஞ்சாட்டப்பட்ட 4 பேரையும் காவலில் எடுக்க, இந்த நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை திரும்பப் பெறுகிறோம்,'' என்றார்.