/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கொடுத்ததெல்லாம் கொடுத்தார்... ஊருக்காக கொடுத்தார்!
/
கொடுத்ததெல்லாம் கொடுத்தார்... ஊருக்காக கொடுத்தார்!
கொடுத்ததெல்லாம் கொடுத்தார்... ஊருக்காக கொடுத்தார்!
கொடுத்ததெல்லாம் கொடுத்தார்... ஊருக்காக கொடுத்தார்!
ADDED : ஜூலை 28, 2025 05:09 AM

உணவு இல்லாதவர்களுக்கு உணவும், ஆடை இல்லாதவர்களுக்கு துணியும் எடுத்து கொடுப்பதை பார்த்திருப்போம். ஆனால், பெங்களூரை சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர், பழைய காலணிகளை மறுசுழற்சி செய்து, குடிசை பகுதிகள், பிழைப்பு தேடி வந்து சாலை ஓரங்களில் தங்கியிருக்கும் குழந்தைகள் முதல் பெரியவர்களிடம் காலணிகளை கொடுத்து வருகிறார்.
கர்நாடகாவை சேர்ந்த மென் பொருள் பொறியாளர் தம்பதியின் மகளாக, வடக்கு கரோலினாவில் பிறந்தவர் சியா கோடிகா, 20. தற்போது பெங்களூரில் உள்ளார். 13 வயதில், தான் பார்த்த காட்சியால், மனம் வருந்தி, 'சோல் வாரியர்ஸ்' என்ற பெயரில் சமூக சேவையில் ஈடுபட்டு வருகிறார். இவரது சேவை அமெரிக்கா, வடக்கு ஆப்ரிக்காவிலும் தொடர்கிறது.
கட்டுமான பணி இது குறித்து சியா கோடிகா கூறியதாவது:
ஒரு நாள், என் வீட்டின் அருகில் கட்டுமான பணி நடந்து வந்தது. அதில் பணியாற்றிய பெரும்பாலான தொழிலாளர்கள் காலணிகள் அணியாமல், வெறும் காலில் இருந்தனர். சிலருக்கு காலில் காயம் ஏற்பட்டும், அதை பொருட்படுத்தாமல் பணியாற்றினர். மேலும் கால்களில் வெடிப்பு அதிக அளவில் இருந்தது. ஆண், பெண் மட்டுமின்றி, குழந்தைகளுக்கும் இதே நிலை தான்.
இதுபோன்று கால்களில் வெடிப்பு ஏற்பட்டு, தொற்று காரணமாக, உலகளவில் 160 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக, டபிள்யூ.எச்.ஓ., எனும் உலக சுகாதார அமைப்பு அறிவித்து உள்ளது. இந்தியாவில் மட்டும் லட்சக்கணக்கான மக்கள், காலணி இல்லாமல் நடமாடுகின்றனர். ஆண்டுக்கு 35 கோடி காலணிகள் குப்பையில் வீசப்படுகிறது.
'சோல் வாரியர்ஸ்' இவ்வாறு குப்பையில் வீசப்படுவதை பார்த்து மனம் நொந்தேன். 13 வயதான என்னால் என்ன செய்ய முடியும்; என் பெற்றோரிடம் கூறினேன். உன் மனசுக்கு எது சரியென படுகிறதோ, அதன்படி செயல்படு என்று ஊக்கம் அளித்தனர். நீண்ட ஆலோசனைக்கு பின் 'சோல் வாரியர்ஸ்' எனும் பழைய காலணி மறு சுழற்சி இயக்கம் உதயமானது.
காலணி இல்லாதவர்களுக்கு காலணி வழங்க, 2019ல் முடிவு செய்தேன். என் வீட்டில் பல ஆண்டுகளாக நான் பயன்படுத்திய பின் வீட்டில் வைத்திருந்த எங்கள் காலணிகளை சுத்தம் செய்தேன். என் வீட்டையே 'சோல் வாரியர்ஸ்'க்கான முதல் அலுவலகமாக மாற்றினேன்.
என்னால் மட்டும் இதை செய்ய முடியாது என்பதால், 'வாட்ஸாப் குழு' துவக்கினேன். இதில் பலரும் ஆர்வமுடன் இணைந்தனர். என் நண்பர்கள், உறவினர்கள் பலர் வீட்டுக்கே தேடி வந்து கொடுத்தனர். சிலர் கூரியர் மூலமாகவும் அனுப்பினர்.
இவ்வாறு கிடைத்த காலணிகளை, மீண்டும் சுத்தம் செய்தேன். இதை, அருகில் உள்ள குடிசை பகுதிக்கு சென்று அங்குள்ள குழந்தைகள் முதல் அனைத்து தரப்பினருக்கும் வழங்கினேன். புதிய காலணிகளை அணிந்த குழந்தைகளின் முகத்தில் தென்பட்ட சிரிப்பு, சந்தோஷம் என்னை பரவசப்படுத்தியது.
தொண்டு நிறுவனங்கள் இதையடுத்து, ஆன்லைனில் தொண்டு நிறுவனங்களை தொடர்பு கொண்டு, தன்னார்வலர்கள் மூலம் காலணிகள் விநியோகிக்க முயற்சித்தேன். 'இந்தியன் பிளாக்கர்ஸ் ஆர்மி' அமைப்பினர் என்னை தொடர்பு கொண்டனர். பெங்களூரு நகரின் பல பகுதிகளில் இருந்தும் பயன்படுத்திய காலணிகளை கொண்டு வந்தனர்.
இவ்வாறு வந்த காலணிகளை சுத்தம் செய்து பலருக்கும் வழங்கினோம். நாட்கள் செல்லச் செல்ல, பல தொண்டு நிறுவனங்கள் எங்களுடன் கைகோர்த்தன. எங்களின் இச்சேவை, சென்னை, மும்பை என நாட்டின் பல நகரங்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டன. இதுவரை 20,000க்கும் மேற்பட்ட காலணிகளை வழங்கியிருப்பது பார்த்து, எனக்கே அதிசயமாக இருந்தது. மனதில் தோன்றிய மகிழ்ச்சியை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இவரின் சேவையை பாராட்டி, 2021ல், 'பிரின்சஸ் ஆப் வேல்ஸ்' டயானா நினைவாக, 'பாரம்பரிய விருது' பெற்றுள்ளார். மற்றவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் நடந்து கொள்ளும் 9 - 25 வயதிற்கு உட்பட்டோருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இது தவிர, மேலும் விருதுகளை பெற்று உள்ளார்.
- நமது நிருபர் -