ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வள்ளிக்கிழங்கு ஜாமுன்
ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வள்ளிக்கிழங்கு ஜாமுன்
ADDED : ஜன 10, 2026 06:40 AM

ஜாமுன் என்றால், பலருக்கும் பிடித்தமான இனிப்பு. மைதா, சர்க்கரை இல்லாமலும், சுவையான ஜாமுன் செய்யலாம். அது தான் வள்ளிக்கிழங்கு ஜாமுன். இதை எப்படி செய்வது என்று பார்க்கலாம்
தேவையான பொருட்கள்
• சர்க்கரை வள்ளிக்கிழங்கு அரை கிலோ
• துருவிய வெல்லம் 1 கப்
• ஏலக்காய் துாள் 2 ஸ்பூன்
• கோதுமை மாவு 3 ஸ்பூன்
• பால் பொடி 1 ஸ்பூன்
• உப்பு 1 சிட்டிகை
• பேக்கிங் சோடா 1 சிட்டிகை
• எண்ணெய் பொறிக்க தேவையான அளவு
செய்முறை
முதலில் சர்க்கரை வள்ளிக்கிழங்கை சுத்தமாக கழுவி, சிறு சிறு துண்டுகளாக நறுக்கி குக்கரில் போட்டு, தேவையான அளவில் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் மிதமான தீயில் வைத்து வேக வைக்கவும். மூன்று விசில் வரும் வரை வைத்தால் போதும்.
சூடு ஆறியதும், சர்க்கரை வள்ளிக்கிழங்கின் தோலை உறித்து துருவி கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் துருவிய வள்ளிக்கிழங்கு, கோதுமை மாவு, பால் பொடியை போட்டு பிசையவும். இந்த கலவையில் பேக்கிங் சோடா, உப்பு போட்டு நன்றாக பிசையவும். பின், சிறு சிறு உருண்டைகளாக உருட்டவும்.
அடுப்பில் பாத்திரத்தை வைத்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, துறுவிய வெல்லத்தை போடவும். வெல்லம் கரைந்ததும், அடுப்பை மிதமான தீயில் வைத்து, ஐந்து நிமிடம் வெல்லப்பாகை கொதிக்க விடவும். அதன்பின், ஏலக்காய் பொடியை போட்டு, அடுப்பை அணைக்கவும்.
அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றவும். காய்ந்ததும் ஏற்கனவே தயாரித்து வைத்துள்ள ஜாமுன் உருண்டைகளை போட்டு, பொன்னிறமாக பொறிக்கவும். அனைத்து உருண்டைகளையும் பொறித்த பின், வெல்லப்பாகில் போடவும்; கலக்கி விடவும். இரண்டு மணி நேரம் பாகில் ஊற வைத்தால், சுவையான சர்க்கரை வள்ளிக்கிழங்கு ஜாமுன் தயார். வாயில் போட்டாலே கரையும். குட்டீஸ்கள் மற்றும் வயதானவர்களுக்கு மிகவும் பிடிக்கும். சர்க்கரை வள்ளிக்கிழங்கில், மருத்துவ குணங்கள் இருப்பதால், உடல் ஆரோக்கியத்துக்கும் நல்லது. கிழங்கு சாப்பிடாத குட்டீஸ்களுக்கு ஜாமுன் வடிவில் கொடுத்தால், சப்பு கொட்டி சாப்பிடுவர்
- நமது நிருபர் - .

