ADDED : ஜூலை 11, 2025 04:43 AM

ஹாசன்: ஹாசனில் ஏற்பட்ட மாரடைப்பு மரணங்களுக்கான காரணத்தை சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் புட்டு, புட்டு வைத்தார்.
ஹாசனில் சில வாரங்களாக இளைஞர்கள் சிலர் மாரடைப்பால் உயிரிழந்தனர். இச்சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதற்கு கொரோனா தடுப்பூசி காரணமாக இருக்கலாம் என, முதல்வர் சித்தராமையா 'பகீர்' கிளப்பினார். ஆனால், இது உண்மையில்லை என மத்திய சுகாதாரத்துறை திட்டவட்டமாக மறுத்தது.
இந்த மரணங்களுக்கான காரணத்தை கண்டறிய குழு அமைக்கப்பட்டது. இந்த குழு நேற்று சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவிடம் நேரில் சந்தித்து அறிக்கையை சமர்ப்பித்தனர்.
இதன்பின், தினேஷ் குண்டுராவ் அளித்த பேட்டி:
ஹாசனில் மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு நீரழிவு நோய், மது பழக்கம், குடும்ப பின்னணி, புகை பிடித்தல் ஆகியவையே காரணம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹாசனில் மே, ஜூன் மாதங்களில் மாரடைப்பால் இறந்ததாக கூறப்பட்ட 24 பேரின் மரணம் குறித்து ஆய்வு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
இதில், 10 பேர் மட்டுமே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிந்தனர். மீதி உள்ளவர்கள் இதயம் மற்றும் வேறு விதமான பிரச்னையால் இறந்து உள்ளனர். எனவே, யாரும் தேவையில்லாமல் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை.
மாரடைப்பு ஏற்படுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளவர்கள் ஆட்டோ, டாக்சி, லாரி ஓட்டுநர்கள். எனவே, அவர்கள் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும். மாரடைப்புக்கும், கொரோனாவுக்கும் தொடர்பு கிடையாது. முதன்மை சுகாதார மையங்களில் ஈ.சி.ஜி.,க்கு ஏற்பாடு செய்வோம். இதய ஜோதி திட்டத்தை விரிவுபடுத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.