ADDED : அக் 06, 2025 05:53 AM

தங்கவயல் : தங்கவயலில் விடிய விடிய பெய்த மழையால் வீடுகளில் நீர் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
ஆந்திரா, தமிழக கடலோரப்பகுதிகளில் ஏற்பட்டுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால், தங்கவயலில் இம்மாதம் 4, 5 ம் தேதி அதிகாலை 2:00 மணி முதல் தொடர்ந்து பெய்த கனமழையால் தாழ்வான பல பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
குறிப்பாக உரிகம் பேட்டை பிஷ் லைன் பகுதியில் தெருவெங்கும் ஏரி போல மழைநீர் தேங்கியது. பலரது வீடுகளில் வெள்ளம் புகுந்தது. அதிகாலை 2:00 மணி முதல் காலை 9:00 மணி வரை வீட்டில் இருந்து நீரை வெளியேற்றினர். தட்டு முட்டு சாமான்கள் , உணவு பொருட்கள், ஆடைகளை பாதுகாத்தனர். பள்ளி பிள்ளைகள் தங்கள் பாடப்புத்தகங்களை மழை நீரில் நனையாதபடி பெட்டிகளில் வைத்து பூட்டினர்.
அப்பகுதி மக்கள் நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தண்ணீர் தேங்காமல், வீடுகளில் புகாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.