/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மங்களூரில் கொட்டி தீர்த்த கனமழை ஏராளமான கிராமங்கள் துண்டிப்பு
/
மங்களூரில் கொட்டி தீர்த்த கனமழை ஏராளமான கிராமங்கள் துண்டிப்பு
மங்களூரில் கொட்டி தீர்த்த கனமழை ஏராளமான கிராமங்கள் துண்டிப்பு
மங்களூரில் கொட்டி தீர்த்த கனமழை ஏராளமான கிராமங்கள் துண்டிப்பு
ADDED : ஜூன் 15, 2025 03:51 AM

மங்களூரு: மங்களூரில் கொட்டித் தீர்த்த கனமழையால், கேரளா செல்லும் சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வட மாவட்டங்களான தார்வாட், கதக், பாகல்கோட்டிலும் கனமழை பெய்தது.
கர்நாடகாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. பெங்களூரு, மைசூரு, கோலார் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இன்னும் எதிர்பார்த்த அளவு கனமழை பெய்யவில்லை. பெங்களூரில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. மதியம் விட்டுவிட்டு சாரல் மழை பெய்தது. இரவிலும் மழை துாரல் போட்டது.
மீட்பு
ஆனால் கடலோர மாவட்டமான தட்சிண கன்னடாவில் நேற்று காலையில் இருந்தே நல்ல மழை பெய்தது. குறிப்பாக மங்களூரு நகரில் கனமழை கொட்டி தீர்த்தது. நீர்மார்க்கம், பாலா, எக்கூரு, பஜ்பே, சிர்தாடி, அபகாரி பவன், படுமர்நாடு, சூரத்கல், கொடியாலுகுத்து, அட்டவாரா, பம்ப்வெல், சூரத்கல், பீகரனகட்டே, கைகம்பா உட்பட நகர் முழுதும் மழை வெளுத்து வாங்கியது.
நகரின் உள்ள முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. கொடியாலுகுத்து பகுதியில் தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. வீடுகளில் வசித்து வந்தவர்கள் ரப்பர் படகு மூலம் மீட்கப்பட்டனர்.
அட்டவாராவில் உள்ள மெஸ்காம் அலுவலகம் அருகே சுவர் இடிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக அங்கு யாரும் இல்லாதால் உயிர்சேதம் ஏற்படவில்லை. பீகரனகட்டே பகுதியில் மழைநீருடன், சாக்கடை கால்வாயும் இணைந்து வீடுகளுக்குள் புகுந்தது. மக்கள் கடும் அவதி அடைந்தனர். வீடுகளுக்குள் புகுந்த தண்ணீரை பாத்திரங்களில் பிடித்து வெளியே ஊற்றினர்.
நிலச்சரிவு
பம்ப்வெல் சதுக்கத்தில் பெய்த கனமழையால், மழைநீர் வெள்ளம் போல பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த வழியாக வாகனங்கள் தத்தளித்தப்படி சென்றன. பம்ப்வெல் சதுக்கத்தில் இருந்து செல்லும் சாலை, கேரளாவின் காசர்கோடு, கோழிக்கோடுவிற்கு பிரதான பாதை என்பதால், அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது.
இதுபோல உத்தர கன்னடா மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் பல இடங்களில் சாலையோரம் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. கார்வார் அருகே பினாகா என்ற இடத்தில் மலையை குடைந்து சுரங்கப்பாதை அமைத்துள்ளனர். தற்போது சுரங்கப்பாதை அமைந்துள்ள இடத்தில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. எந்த நேரத்திலும் அசம்பாவிதம் நடக்கவும் வாய்ப்பு உள்ளது.
வெள்ளப்பெருக்கு
வடமாவட்டமான பாகல்கோட் ஹுன்குந்தில் நேற்று முன்தினம் இரவு முதல் விடாமல் மழை பெய்து வருகிறது. இதனால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் தரைப்பாலங்கள் மூழ்கின. நேற்று காலை ராம்வதகி என்ற கிராமத்தில் இருந்து கார்டி என்ற ஊருக்கு செல்ல அரசு பஸ் நடுவழியில், வெள்ளத்தில் சிக்கிக் கொண்டது. டிராக்டர் மூலம் பஸ் வெளியே இழுக்கப்பட்டது.
கதக் நரகுந்தாவில் பெய்து வரும் கனமழையால், பென்னேஹல்லா ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் நரகுந்த் - ரோன், நரகுந்த் - கதக், ஷிரோல் - ஹட்லி கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. சூரகோடா, குர்லகேரி, கங்காபுரா, பனஹட்டி கிராமங்களை வெள்ளம் சூழ்ந்து உள்ளது. விளைநிலங்களுக்குள் வெள்ளம் புகுந்ததால் பயிர்கள் சேதம் அடைந்தன.