ஆக., 16 -- 18 வரை லோக் பவனை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி
ஆக., 16 -- 18 வரை லோக் பவனை பார்க்க பொதுமக்களுக்கு அனுமதி
ADDED : ஆக 13, 2026 12:10 AM

பெங்களூரு: கவர்னர் மாளிகையான லோக் பவனை பார்க்க, ஆகஸ்ட் 16 முதல், 18ம் தேதி வரை பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அங்கு, சில பொருட்களை கொண்டு செல்ல, தடை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட்டின் சிறப்பு செயலர் பிரபு சங்கர், நேற்று வெளியிட்ட அறிக்கை:
இந்தியாவின் 80வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, ஆகஸ்ட் 16 முதல், 18ம் தேதி கவர்னர் மாளிகையான லோக்பவனை பார்க்க, பொது மக் களுக்கு அனுமதி அளிக்கப்படும். அந்த மூன்று நாட்களும் மாலை 5:30 மணி முதல் இரவு 7:30 மணி வரை, கர்நாடக லோக்பவன், பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும்.
விதிமுறைப்படி ஒவ்வொருவரும், ஆதார் கார்டு போன்ற அரசு அங்கீகாரம் பெற்ற, ஏதாவது ஓர் அடையாள அட்டையை கொண்டு வருவது கட்டாயம். இவற்றை நுழைவாசலில் உள்ள, பாதுகாப்பு ஊழியரிடம் காண்பிக்க வேண்டும்.
லோக் பவன் வளாகத்தில் நுழைவதற்கு முன், பார்வையாளர்கள் அனைவரும் பாதுகாப்பு சோதனைக்கு பிறகே, உள்ளே அனுமதிக்கப்படுவர்.
பாதுகாப்பு ஊழியர்கள் கூறும் உத்தரவுகளை பின்பற்ற வேண்டும். பொதுமக்கள் செல்ல நிர்ணயித்துள்ள வழியாக மட்டுமே, லோக் பவனுக்குள் நுழைய அனுமதி உள்ளது. இங்கு அமைதி, ஒழுங்கை கடைபிடித்து, பார்வையிட வேண்டும்.
லோக் பவன் வளாகத்தில், தனியார் டாக்சிகளுக்கு அனுமதி இல்லை. பொதுமக்கள், தின்பண்டங்கள், கூர்மையான பொருட்கள், உலோக பொருட்கள், கேமராக்கள், வீடியோ கேமராக்கள், லேப்டாப் கொண்டு வர கூடாது. தீப்பெட்டிகள், லைட்டர்கள் எளிதில் தீப்பற்ற கூடிய அனைத்து பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
