ADDED : செப் 30, 2026 11:12 PM

- நமது நிருபர் -
மழைக்காலத்தில் குளுகுளுவென்ற, அழகான நீர்வீழ்ச்சியை காண வேண்டுமா... ஹெப்பே நீர்வீழ்ச்சிக்கு வாருங்கள். தசரா விடுமுறைக்கு சுற்றுலா செல்ல திட்டமிட்டால், இந்த நீர்வீழ்ச்சியையும் சுற்றுலா தலங்கள் பட்டியலில் சேர்த்து கொள்ளுங்கள்.
சிக்கமகளூரு மாவட்டம், தரிகெரே தாலுகாவின், கெம்மன்னுகுந்தி அருகில், ஹெப்பே நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. சுற்றுலா பயணியர், இயற்கை ஆர்வலர்களின் சொர்க்கமாக விளங்குகிறது. வார இறுதி நாட்களில் இங்கு வருவோர் எண்ணிக்கை அதிகம் இருக்கும். நண்பர்கள், குடும்பத்துடன் வந்து நீர்வீழ்ச்சியை ரசிக்கின்றனர்.
இது பெரிய ஹெப்பே, சிறிய ஹெப்பே என, இரண்டு கட்டங்களில் பாய்கிறது. இந்த அருவியின் மொத்த உயரம், 551 அடி. மணமணக்கும் பசுமையான காபி தோட்டங்கள், அடர்ந்த வனப்பகுதி நடுவே இருப்பது, நீர்வீழ்ச்சியின் மற்றொரு சிறப்பாகும்.
மரம், செடிகளின் இலைகள் அசைவு, பறவைகளின் ரீங்காரத்தை தவிர, வேறு எந்த சத்தமும் இல்லாமல் அற்புதமான சூழ்நிலையை ரசிக்கலாம்.
வனப்பகுதி சாலையில் செல்வது கஷ்டம். நுழைவாயிலில் இருந்து வனத்துறையின் ஜீப் இயக்கப்படுகிறது. ஜீப் நிறுத்தப்படும் இடத்தில் இருந்து, ஒரு கி.மீ., தொலைவு நடந்து சென்றால், ஹெப்பே நீர்வீழ்ச் சியை அடையலாம்.
இரண்டு ஓரங்களிலும் ஓங்கி வளர்ந்துள்ள மரங்கள், செடிகள் அசைவது நம்மை தலையசைத்து வரவேற்பது போன்றிருக்கும். காபி தோட்டங்களை கடந்து செல்ல வேண்டும். சாகச பிரியர்களுக்கு தகுந்த இடமாகும் .
கரையில் இருந்து நீர் பாய்ந்து வருவதை, சுற்றிலும் உள்ள இயற்கை அழகை ரசித்துவிட்டு, திரும்புவது பாதுகாப்பானது.
எப்படி
செல்வது
பெங்களூரில் இருந்து 242 கி.மீ., மங்களூரில் இருந்து 148 கி.மீ., மைசூரில் இருந்து, 171 கி.மீ., மாண்டியாவில் இருந்து 195 கி.மீ.,யில் சிக்கமகளூரு உள்ளது. சிக்கமகளூரில் இருந்து 58 கி.மீ., தொலைவில் தரிகெரே உள்ளது.
மாநிலத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும், சிக்கமகளூருக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், ரயில்கள் இயக்கப்படுகின்றன. தனியார் பஸ் வசதியும் உள்ளது. சிக்கமகளூரில் இறங்கி, வாடகை வாகனத்தில், இந்த அருவிக்கு செல்லலாம்.
பார்வை நேரம்: காலை 9:00 முதல், மதியம் 3:00 மணி வரை. கட்டணம் எதுவும் இல்லை. அனுமதி இலவசம்.
அருகில் உள்ள சுற்றுலா தலங்கள்: கெம்மன்னுகுந்தி, ராக் கார்டன், சாந்தி நீர்வீழ்ச்சி, கல்ஹட்டி அருவி, லக்கவள்ளி அணை, முள்ளய்யன கிரி, பாபாபுடன் கிரி, மாணிக்ய தாரா நீர்வீழ்ச்சி, கலசேஸ்வரா சுவாமி கோவில், குதுரேமுக், ஹனுமனகுந்தி நீர்வீழ்ச்சி.
