UPDATED : செப் 29, 2026 01:32 PM
ADDED : செப் 26, 2026 04:10 AM

தயிர் என்பது பெரும்பாலான வீடுகளில் அன்றாடம் பயன்படுத்தப்படும் முக்கியமான உணவுப் பொருள். குறிப்பாக மதிய உணவின் இறுதியில் சாதத்துடன் தயிர் சேர்த்து சாப்பிடுவது அல்லது தயிர் சாதம் செய்வது பலரின் வழக்கமாக உள்ளது. செரிமானத்தை மேம்படுத்தவும், உடலுக்கு குளிர்ச்சியை வழங்கவும் தயிர் உதவுகிறது. ஆனால், சில நாட்கள் பழையதாகி அதிகமாக புளித்த தயிரை சாப்பிடுவது பாதுகாப்பானதா, அது உடல்நலப் பிரச்சனைகளை ஏற்படுத்துமா என்ற கேள்வி பலரிடமும் உள்ளது.
தயிர் ஏன் புளிக்கிறது?
தயிரில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் பாலை நொதிக்கச் செய்து லாக்டிக் அமிலத்தை உருவாக்குகின்றன. காலப்போக்கில் இந்த நொதித்தல் தொடர்வதால் அமிலத்தின் அளவு அதிகரித்து தயிர் புளிப்பாகிறது.
தயிர் புளிப்பாக இருப்பது மட்டுமே அது கெட்டுவிட்டது என்று அர்த்தமல்ல. குளிர்சாதனப் பெட்டியில் முறையாகப் பாதுகாக்கப்பட்டிருந்தால், சற்று கூடுதலாக புளித்திருந்தாலும் அதை சாப்பிடலாம்.
தயிரை எப்படி சேமிக்கிறோம் என்பதே முக்கியம்
பழைய தயிரை சாப்பிடலாமா வேண்டாமா என்பதைத் தீர்மானிப்பதில் அதன் சேமிப்பு முறை மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. தயிரை எப்போதும் சுத்தமான, மூடியுள்ள பாத்திரத்தில் வைத்து குளிர்சாதனப் பெட்டியில் சேமிக்க வேண்டும். குறிப்பாக வெப்பமான காலநிலையில் பல மணி நேரம் தயிரை வெளியில் வைத்திருந்தால், தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் வளர வாய்ப்பு அதிகரிக்கும் என்பதால் கூடுதல் கவனம் தேவை.
தயிர் கெட்டுப்போனதற்கான அறிகுறிகள் என்ன?
தயிரின் மேற்பரப்பில் பூஞ்சை வளர்ச்சி, பச்சை, கருப்பு, இளஞ்சிவப்பு போன்ற அசாதாரண நிற மாற்றங்கள், அழுகிய வாசனை அல்லது வழக்கத்திற்கு மாறான வாசனை, அதிகப்படியான வழவழப்புத் தன்மை மற்றும் வழக்கமான புளிப்பிலிருந்து மாறுபட்ட சுவை ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் அதை சற்றும் யோசிக்காமல் தூக்கி எறிந்துவிடுவது பாதுகாப்பானது.
பூஞ்சை படிந்த தயிரில் தெரியும் பகுதியை மட்டும் அகற்றி சாப்பிடக்கூடாது. மாசுபாடு கண்களுக்கு தெரியாத பகுதிகளிலும் பரவியிருக்கலாம்.
அதிகமாகப் புளித்த தயிரின் பக்கவிளைவுகள்
தயிரில் கெட்டுப்போனதற்கான அறிகுறிகள் இல்லாவிட்டாலும், மிக அதிகப் புளிப்புத்தன்மை சிலருக்கு அசிடிட்டி, வயிறு உப்புசம், வயிறு அசெளகரியம் போன்ற உடல்நலக் கோளாறுகளை ஏற்படுத்தலாம். குறிப்பாக, அமிலத்தன்மை கொண்ட உணவுகளை எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாத நபர்களுக்கு இந்தப் பிரச்சனைகள் வர அதிக வாய்ப்புள்ளது.
