‘போக்சோ’ சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது உயர் நீதிமன்றம் கண்டிப்பு
‘போக்சோ’ சட்டம் தவறாக பயன்படுத்தப்படுகிறது உயர் நீதிமன்றம் கண்டிப்பு
UPDATED : நவ 07, 2026 12:00 AM
ADDED : நவ 06, 2026 11:54 PM
பெங்களூரு: போக்சோ சட்டத்தை தவறாக பயன்படுத்துவதை, கர்நாடக உயர் நீதிமன்றம் வன்மையாக கண்டித்துள்ளது.
பெங்களூரில் வசிக்கும், பணக்கார குடும்பத்தை சேர்ந்த 35 நபருக்கும், 33 வயது பெண்ணுக்கும், 2018ல் திருமணம் நடந்தது. தம்பதிக்கு 2022ன் நவம்பர் 14ல் பெண் குழந்தை பிறந்தது.
இதற்கிடையே குடும்ப பிரச்னை காரணமாக, தம்பதிக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டது. 2024ல் விவாகரத்து கோரி, குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
தாய் வீட்டில் குழந்தையுடன் வசிக்கும் மனைவி, தன் மகளை பார்க்க தந்தையை அனுமதிக்கவில்லை. குழந்தையை பராமரிக்க, வசிக்கும் உரிமை தனக்கும் உள்ளது. இதற்கு மனைவி இடையூறு செய்வதாக கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். நீதிமன்றமும் நிர்ணயித்த நாட்களில், மகளுடன் இருக்க தந்தைக்கு அனுமதி அளித்தது. அதன்பின் அவ்வப்போது மகளை பார்த்து வந்தார்.
இந்நிலையில், தன் மகளை தந்தை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம்சாட்டி கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது மனைவி அளித்த புகாரில், போலீசாரும் போக்சோ சட்டத்தின் கீழ், வழக்கு பதிவு செய்தனர்.
இதை ரத்து செய்ய கோரி, உயர் நீதிமன்றத்தில் தந்தை வழக்கு தொடர்ந்தார்.
நீதிபதி நாகபிரசன்னா, ‘‘தன்னை பலாத்காரம் செய்ததாக, சிறுமி கூறவில்லை. சிறுமியை பரிசோதித்த டாக்டர்களும், இதை உறுதிப்படுத்தவில்லை. தாய் மட்டுமே குற்றஞ்சாட்டியுள்ளார். சிறுமியை டாக்டர்கள் பரிசோதித்ததில் அவர் பலாத்காரம் செய்யப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது’’ என கருத்து தெரிவித்து, மனுதாரர் மீதான போக்சோ வழக்கை ரத்து செய்து, நீதிபதி உத்தரவிட்டார்.
