/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரில் பெருகும் பிளக்ஸ் பேனர்களால் ஐகோர்ட்... அதிருப்தி! மாநகராட்சி நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க உத்தரவு
/
பெங்களூரில் பெருகும் பிளக்ஸ் பேனர்களால் ஐகோர்ட்... அதிருப்தி! மாநகராட்சி நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க உத்தரவு
பெங்களூரில் பெருகும் பிளக்ஸ் பேனர்களால் ஐகோர்ட்... அதிருப்தி! மாநகராட்சி நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க உத்தரவு
பெங்களூரில் பெருகும் பிளக்ஸ் பேனர்களால் ஐகோர்ட்... அதிருப்தி! மாநகராட்சி நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க உத்தரவு
ADDED : ஜூலை 08, 2025 11:51 PM

கர்நாடகாவின் தலைநகரான பெங்களூரில் பல மாநில மக்களும் வசிக்கின்றனர். பெங்களூரு மாநகராட்சியின் அனுமதியின்றி கோவில் திருவிழா, அரசியல்வாதிகள் பிறந்த நாள், கட்சி கூட்டம், தனி நபர் திருமண பிளக்ஸ் பேனர்கள் வைப்பது அதிகரித்தன.
இதை அகற்ற கோரி, 2021ல் சமூக ஆர்வலர் வெங்கடேஷ், உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீது விசாரணை நடத்திய நீதிமன்றம், பிளக்ஸ் பேனர்களை அகற்ற உத்தரவிட்டது.
இதையடுத்து, மாநகராட்சியும், இவற்றை அகற்றின. சில நாட்களுக்கு பின், வருவாயை பெருக்க, மாநகராட்சி அனுமதியுடன் பிளக்ஸ் பேனர்கள் வைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் அரசு கோரிக்கை விடுத்தது. நீதிமன்றமும் இதற்கு அனுமதி அளித்தது.
மாநகராட்சி அனுமதி பெற்று, உரிய கட்டணம் செலுத்தி, நகரில் பேனர்கள் வைக்கப்பட்டன. இதுவும் சில காலம் மட்டுமே நீடித்தது. மீண்டும் நகரில் சட்ட விரோதமாக பிளக்ஸ் பேனர்கள் அதிகரிக்க துவங்கின.
இதையடுத்து, சமூக ஆர்வலர் வெங்கடேஷ், உயர் நீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தார். இவ்வழக்கு, நீதிபதி முத்கல் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பு வக்கீல் சுனில் பிரசாத் வாதிட்டதாவது:
உச்ச நீதிமன்ற உத்தரவையும், கர்நாடக உயர் நீதிமன்ற முந்தைய உத்தரவையும் மாநகராட்சி கடைப்பிடிக்கவில்லை. இதன் அதிகாரிகள், போதிய நடவடிக்கை எடுக்காததால், நகரின் பல இடங்களில் மீண்டும் அரசியல் தலைவர்களின் படங்கள் அடங்கிய பேனர்கள் தலைதுாக்க துவங்கி உள்ளன.
இவ்வாறு வாதிட்ட அவர், நகரின் பல இடங்களில் பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டுள்ள படங்களையும் நீதிபதியிடம் சமர்ப்பித்தார்.
மாநகராட்சி சார்பில் வக்கீல் வாதிட்டதாவது:
அனுமதியின்றி வைக்கப்பட்ட அரசியல்வாதிகளின் புகைப்படங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களிடம் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
பேனர்களில் உள்ள தலைவர்கள் மீது போலீசில் வழக்கும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மாநகராட்சி அதிகாரிகள் பிளக்ஸ் பேனர்களை அகற்றிய பின்னரும், அதே இடத்தில் மீண்டும் வேறு பேனர்கள் வைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.
நீதிபதி முத்கல் கூறுகையில், ''பூங்கா நகரம் என்று அழைக்கப்பட்ட பெங்களூரு, இன்று அரசியல்வாதிகள் படங்கள், அவர்களின் கட்சி பிளக்ஸ் பேனர்களாக நிறைந்து, பிளக்ஸ் பேனர் நகரமாக மாறி உள்ளது. அரசியல்வாதிகளின் பிளக்ஸ் பேனர்கள், கோவில்களையும் விட்டு வைக்கவில்லை.
''இவை எப்போது அகற்றப்படும். பேனர்கள் வைத்தவர்கள் மீது மாநகராட்சி நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத்துள்ளது. நகரில் சட்டவிரோதமாக வைக்கப்பட்டு உள்ள பிளக்ஸ் பேனர்களை அகற்றி, ஜூலை 23ல் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்,'' என கூறி, விசாரணையை ஒத்திவைத்தார்.
இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
கடந்த 11 மாதங்களில், பெங்களூரில் சட்ட விரோதமாக வைக்கப்பட்டிருந்த 25,214 பிளக்ஸ் பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளன. 448 வழக்குகள் பதிவு செய்து, 4.10 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டு உள்ளது.
இன்று நாங்கள் பேனர்களை அகற்றினால், நாளை அதே இடத்தில் வேறு பேனர்கள் வைக்கப்படுகின்றன. அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைப்பது சட்டத்தை மீறுவது என்று தெரிந்தும், பேனர்கள் வைக்கின்றனர்.
எனவே தான், புதுடில்லி போன்று ஒவ்வொரு மண்டலத்திலும் குறிப்பிட்ட இடத்தில் விளம்பர பேனர்களை வைக்க, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அனுமதி கேட்க உத்தேசித்துள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.