/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
முதல்வர் பதவிக்காக காங்., - எம்.எல்.ஏ.,க்களிடம்... குதிரை பேரம்? தலா ரூ.50 கோடி, பார்ச்சூனர் கார் தருவதாக வலை
/
முதல்வர் பதவிக்காக காங்., - எம்.எல்.ஏ.,க்களிடம்... குதிரை பேரம்? தலா ரூ.50 கோடி, பார்ச்சூனர் கார் தருவதாக வலை
முதல்வர் பதவிக்காக காங்., - எம்.எல்.ஏ.,க்களிடம்... குதிரை பேரம்? தலா ரூ.50 கோடி, பார்ச்சூனர் கார் தருவதாக வலை
முதல்வர் பதவிக்காக காங்., - எம்.எல்.ஏ.,க்களிடம்... குதிரை பேரம்? தலா ரூ.50 கோடி, பார்ச்சூனர் கார் தருவதாக வலை
UPDATED : நவ 24, 2025 03:42 AM
ADDED : நவ 24, 2025 03:37 AM

கர்நாடகாவில், முதல்வர் பதவிக்காக சித்தராமையா, சிவகுமார் இடையே, 'மியூசிகல் சேர்' விளையாட்டு நடந்து வருகிறது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களுக்கு, திடீர் மவுசு ஏற்பட்டுள்ளது.
முதல்வரை தேர்வு செய்வதில், எம்.எல்.ஏ.,க்களின் பங்களிப்பு முக்கியம். எனவே தங்களுக்கு ஆதரவாக நிற்கும்படி, எம்.எல்.ஏ.,க்களிடம் முதல்வரும், துணை முதல்வரும் மன்றாடுகின்றனர்.
இதற்கிடையே, பா.ஜ.,வை சேர்ந்த மேல்சபை எதிர்க்கட்சி தலைவர் சலவாதி நாராயணசாமியின் குற்றச்சாட்டு, அரசியல் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, பெங்களூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
காங்கிரசில் குதிரை பேரம் ஜோராக நடக்கிறது. ஒவ்வொரு எம்.எல்.ஏ.,வுக்கும் தலா 50 கோடி ரூபாய் கொடுப்பதாக, தகவல் வந்துள்ளது. சிலர் இந்த தொகை போதாது. 75 கோடி ரூபாய், மேலும் சிலர் 100 கோடி ரூபாய் வேண்டும் என, கேட்கிறார்களாம். முதல்வர் பதவிக்கு போட்டி போடுேவார், 'இப்போதைக்கு அவ்வளவு பணம் தர முடியாது. 50 கோடி ரூபாயுடன், விலை உயர்ந்த ஒரு பிளாட், ஒரு பார்ச்சூனர் கார் கொடுக்கிறோம்' என, கூறினராம். இதற்கு முன் ஒரு கட்சியினரை, இன்னொரு கட்சிக்கு இழுக்க குதிரை பேரம் நடத்துவதாக, காங்கிரசார் குற்றம்சாட்டினர். ஆனால் இப்போது காங்கிரசிலேயே அது நடக்கிறது.
காங்., பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா, ஏற்கனவே வியாபாரத்தை துவக்கி விட்டார். அமைச்சர் பதவி வேண்டும் என்றால், ஒருவர் 200 கோடி ரூபாய் கொடுக்க வேண்டும் என, கூறியுள்ளனர். எம்.எல்.ஏ., வீரேந்திர பப்பி, முன்கூட்டியே அட்வான்ஸ் கொடுத்துள்ளாராம். இதுதொடர்பாக, விசாரணை நடத்த வேண்டும். சுர்ஜேவாலாவை கைது செய்ய வேண்டும்.
காங்கிரஸ் இரண்டு, மூன்று கட்சிகளாக பிரிந்துள்ளது. பெரிதாக இரண்டு கட்சிகள் கண்ணுக்கு தெரிகின்றன. ஒன்று முதல்வர் சித்தராமையா கட்சி, மற்றொன்று துணை முதல்வர் சிவகுமார் கட்சி. இவ்விரு கட்சியினர், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,க்களை விலைக்கு வாங்க முயற்சிக்கின்றனர். இதற்காக குதிரை பேரம் நடக்கிறது. இதுதொடர்பாக, விசாரணை நடத்த வேண்டும். அமலாக்கத்துறையிலும் நாங்கள் புகார் அளிப்போம்.
சித்தராமையா, சிவகுமார் இடையே ஏற்படும் சண்டையை பார்த்தால், அரசு கவிழும். தேர்தலுக்கு தயாராக வேண்டும் என, தோன்றுகிறது. மக்களின் பிரச்னைகளை அறிந்து, அரசு செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் அது அல்பாயுசு அரசாக இருக்கும். காங்கிரஸ் மேலிடம் வலுவாக இருந்தால், இப்படி நடக்காது; மேலிடம் மவுனமாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

