/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
20 முறை மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவர்
/
20 முறை மனைவியை கத்தியால் குத்தி கொன்ற கணவர்
ADDED : ஜூலை 07, 2025 03:29 AM

துமகூரு : குடும்ப தகராறில் காதல் மனைவியின் உடலில் 20 இடங்களில், கத்தியால் குத்தி கொலை செய்த, கணவரை போலீசார் தேடிவருகின்றனர்.
துமகூரு ரூரல் அந்தரசனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நவீன், 25. மாண்டியாவின் மலவள்ளி கணனுார் கிராமத்தின் கீதா, 20. இவர்கள் இருவருக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
இரண்டு ஆண்டுக்கு முன்பு திருமணம் செய்தனர். ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது. துமகூரு ஏ.பி.எம்.சி., மார்க்கெட்டில் உள்ள ஒரு காய்கறி கடையில் நவீன் வேலை செய்கிறார்.
கடந்த இரண்டு மாதங்களாக தம்பதி இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது. நான்கு நாட்களுக்கு முன்பு கீதாவை பார்க்க அவரது பெற்றோர் வந்தனர்.
கணவர் தினமும் சண்டை போடுவதால், குழந்தையை நன்றாக கவனிக்க முடியவில்லை. கொஞ்ச நாட்கள் உங்களுடன் இருக்கட்டும் என்று கூறி, குழந்தையை பெற்றோருடன் கீதா அனுப்பி வைத்தார்.
நேற்று முன்தினம் இரவு 10:00 மணிக்கு வேலை முடிந்து வீட்டிற்கு வந்த நவீன், கீதாவிடம் தகராறு செய்து உள்ளார். இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது.
கோபம் அடைந்த நவீன் சமையல் அறைக்கு சென்று, கத்தியை எடுத்து வந்து கீதாவை சரமாரியாக குத்திவிட்டு தப்பி சென்றார். ரத்தவெள்ளத்தில் சரிந்து விழுந்து உயிரிழந்தார்.
நேற்று காலை வீட்டின் உரிமையாளர் வாடகை பணம் வாங்க சென்ற போது, கீதா இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்த துமகூரு ரூரல் போலீசார் அங்கு வந்தனர்.
கீதா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். கீதாவின் உடலில் முகம், கழுத்து, முதுகு என 20 இடங்களில் கத்திக்குத்து விழுந்தது தெரியவந்தது.
ஆத்திரத்தில் கண்மூடித்தனமாக கீதாவை கத்தியால் குத்தி நவீன் கொலை செய்து உள்ளார்.
வீட்டின் உரிமையாளர் அளித்த புகாரில், துமகூரு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். தலைமறைவாக உள்ள நவீனை தேடி வருகின்றனர்.