/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இப்போதைக்கு நான் நடுநிலை: மவுனம் கலைத்த ஜி.டி.தேவகவுடா
/
இப்போதைக்கு நான் நடுநிலை: மவுனம் கலைத்த ஜி.டி.தேவகவுடா
இப்போதைக்கு நான் நடுநிலை: மவுனம் கலைத்த ஜி.டி.தேவகவுடா
இப்போதைக்கு நான் நடுநிலை: மவுனம் கலைத்த ஜி.டி.தேவகவுடா
ADDED : ஜூலை 10, 2025 04:00 AM

மைசூரு: ''இப்போதைக்கு நான் நடுநிலையாக இருக்கிறேன். பா.ஜ., காங்கிரசில் சேருவதா அல்லது ம.ஜ.த.,விலேயே தொடருவதா என்பதை, தொகுதி மக்களுடன் ஆலோசித்த பின் முடிவெடுப்பேன்,'' என, ம.ஜ.த., - எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா தெரிவித்தார்.
ம.ஜ.த., தலைமை மீது அக்கட்சியின் சாமுண்டீஸ்வரி தொகுதி எம்.எல்.ஏ., ஜி.டி.தேவகவுடா அதிருப்தியில் உள்ளார். இதை அவரது மகனும், ஹூன்சூர் எம்.எல்.ஏ.,வுமான ஹரிஷ் கவுடாவும் உறுதி செய்திருந்தார்.
இதுகுறித்து ஜி.டி.தேவகவுடா நேற்று அளித்த பேட்டி:
சாமுண்டீஸ்வரி தொகுதியில் ம.ஜ.த., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றேன். சித்தராமையா எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோதும், இப்போது முதல்வராக இருக்கும்போது, இத்தொகுதியில் எவ்வாறு பணிகள் நடந்தன என்பது மற்ற எம்.எல்.ஏ.,க்களுக்கு தெரியாது. இத்தொகுதியில் தான், சித்தராமையாவை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றேன்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட என்னை, ஊழல்வாதி, கட்சி மாறியவன் என்று எந்த தலைவரும் கூற முடியாது. பாதி வழியில் விட்டு செல்லும் தலைவரல்ல நான்.
அது முதல்வர் சித்தராமையாவோ அல்லது துணை முதல்வர் சிவகுமாரோ, நீங்கள் வரவில்லை என்றால், அரசு பிழைக்காது என கேட்கவில்லை. ம.ஜ.த.,வும் பா.ஜ.,வும் என்னை அழைக்கவில்லை.
இன்று வரவில்லை என்று கூறுபவர்கள், சென்னபட்டணா இடைத்தேர்தலின்போது, பிரசாரத்துக்கு அழைத்தீர்களா? ம.ஜ.த.,வை விட்டு சித்தராமையா வெளியேறியபோது, கட்சியில் இருந்தவர்கள் யார்? என்னை பற்றி பேச உங்களுக்கு என்ன உரிமை உள்ளது? ஏதோ ஒரு காரணத்துக்காக கட்சிக்கு வந்து அதிகாரத்தை வைத்துள்ள நீங்கள், என்னை எதிர்கொள்ள பலம் உள்ளதா?
வரும் நாட்களில் தொகுதி மக்களின் கூட்டத்தை கூட்டுவேன். பா.ஜ.,வில் சேருவதா, காங்கிரசில் சேருவதா சேரவோ, ம.ஜ.த., தொடருவதா என்பதை நான் தனியாக முடிவெடுக்க முடியாது; தொகுதி மக்கள் முடிவு செய்வர்.
மாநில இளைஞர் அணி தலைவர் நிகில், ஒரு திரைப்பட நடிகராகவும் உள்ளார்; பிரபலமானவரும் கூட. மூன்று முறை தேர்தல்களில் தோல்வி அடைந்த அனுபவம் அவருக்கு உண்டு.
எச்.டி.தேவகவுடா கட்டிய இக்கட்சியை காப்பாற்ற வேண்டாமா? இப்போதைக்கு நான் நடுநிலை வகிக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.