
பெலகாவி சுவர்ண விதான் சவுதாவில் நடக்கும், சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று, குனிகல் காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரங்கநாத் பேசுகையில், ''குனிகல் தாலுகாவில் உள்ள துவக்க வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு நிதி ஒதுக்குவதில் பாரபட்சம் காட்டப்படுகிறது,'' என்றார்.
'கூட்டுறவு துறையை தன் வசம் வைத்திருக்கும் முதல்வர், அலட்சியமாக செயல்படும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகள் பிரச்னைகளுக்காக, நாங்கள் குரல் கொடுக்கவில்லை என்றால், அரசு ஒதுக்கிய பணம் வேறு பணிகளுக்கு பயன்படுத்தப்படும்' என்றும் மேலும் ஆவேசமாக கூறினார்.
எரியும் நெருப்பு இதற்கு பதில் அளித்த முதல்வர் சித்தராமையா, ''என் மீது நம்பிக்கை வையுங்கள், உங்கள் தொகுதி விவசாயிகள் பிரச்னையை சரி செய்கிறேன்,'' என்றார். அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி தலைவர் அசோக், ''ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,வே, தன் தொகுதிக்கு நிதி ஒதுக்குவதில் பாகுபாடு காட்டப்படுவதாக ஆக்ரோஷமாக பேசுகிறார்.
''முதல்வர் ஏன் அந்தத் தொகுதிக்கு பாகுபாடு காட்டுகிறார்,'' என்றார். ஏற்கனவே நெருப்பு எரிந்து கொண்டு இருக்கிறது. அதில் நெய் ஊற்ற வேண்டாம் என, சித்தராமையா பதிலளித்தார்.
இந்தப் பதிலை கெட்டியாக பிடித்து கொண்ட அசோக், ''காங்கிரஸ் வீட்டில் நெருப்பு எரிவதை நீங்கள் ஒப்புக் கொள்கிறீர்கள்... அப்படித்தானே,'' என்று கேட்டார். இதனால், பதைபதைத்து போன சித்தராமையா, 'நான் கூறியது பழமொழி தான்' என்றார்.
சபையில் சிரிப்பலை மீண்டும் பேசிய அசோக், சிலர் முதல்வராக பூஜை செய்கின்றனர் என்று, துணை முதல்வர் சிவகுமார் பெயரை குறிப்பிடாமல் தெரிவித்தார். அப்போது குறுக்கிட்ட பா.ஜ., உறுப்பினர் சுனில்குமார், சித்தராமையாவை பார்த்து, ''நீங்கள் பழமொழியை தான் கூறினீர்களா அல்லது உண்மையை கூறினீர்களா,'' என்று கேட்டார். மீண்டும் பேசிய அசோக், ''நீங்கள் ஐந்து வருடம் முதல்வராக இருப்பீர்களா, மாட்டீர்களா,'' என்று கேட்டார்.
இதனால், கடும் கோபம் அடைந்த சித்தராமையா, ''இப்போது நான் முதல்வர்; வரும் நாட்களிலும் முதல்வர்; கட்சி மேலிடம் கூறும் வரை நானே முதல்வர்,'' என்றார்.
உடன், 'உள்துறை அமைச்சர் பரமேஸ்வர் மட்டுமே உங்கள் பக்கம் ஆதரவாக இருப்பார். மற்ற யாரும் நிற்க மாட்டார்கள்' என்று அசோக் கூறியதால், சபையில் சிரிப்பலை எழுந்தது.
ஆப்பரேஷன் தாமரை தொடர்ந்து சித்தராமையா பேசுகையில், ''எங்களிடம், 140 எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்ய மக்கள் ஆசி கொடுத்து உள்ளனர். வரும், 2028 தேர்தலிலும் வெற்றி பெறுவோம். பா.ஜ.,வை மக்கள் ஆதரிக்கவில்லை. ஆப்பரேஷன் தாமரை மூலம் தான் இரண்டு முறையும் ஆட்சிக்கு வந்தீர்கள்,'' என்றார்.
இதனால், கோபம் அடைந்த அசோக், '' நீங்கள் ஏன் ம.ஜ.த., தலைவர்களை தேடி அவர்கள் வீட்டு வாசலுக்கு சென்றீர்கள்,'' என கேள்வி எழுப்பினார்.இதற்கு பதில் அளித்த சித்தராமையா, ''நீங்கள் எதற்காக ம.ஜ.த.,வை, உங்கள் கூட்டணியில் சேர்த்து உள்ளீர்கள். உங்களை போன்று மூன்று பேரை, நாங்கள் முதல்வராக மாற்றவில்லை,'' என்றார்.
தொடர்ந்து விவாதம் நடந்தது.
அமைச்சரின் இரவு விருந்து இந்நிலையில், கட்சி மேலிடம் கூறும் வரை நானே முதல்வர் என்று சித்தராமையா அறிவித்தது பற்றி அறிந்ததும், துணை முதல்வர் சிவகுமார் அதிர்ச்சி அடைந்தார்.
சட்டசபையில் உள்ள தனது அலுவலகத்தில், ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையின் போது, மேலிட தலைவர்களை சந்திக்கும் போது, முதல்வர் பதவி பற்றி அடிக்கடி பேசும் சித்தராமையாவை, கட்சி மேலிடத்திடம் போட்டு கொடுப்பது பற்றி விவாதித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இது ஒரு புறமிருக்க, 2028ல் முதல்வர் பதவி கேட்பேன் என்று கூறி வரும், பொதுப்பணி துறை அமைச்சர் சதீஷ் ஜார்கிஹோளி, பெலகாவியில் உள்ள தனது வீட்டில் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., சமூக எம்.எல்.ஏ.,க்கள், எம்.எல்.சி.,க்களுக்கு நேற்று இரவு விருந்து கொடுத்தார். இந்த விருந்தின் போது, முதல்வர் பதவி தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முனிரத்னா, ஹரிபிரசாத் சந்திப்பு
பெங்களூரு ஆர்.ஆர்.நகர் பா.ஜ., - எம்.எல்.ஏ., முனிரத்னாவும், துணை முதல்வர் சிவகுமாரும் அரசியல் எதிரிகளாக உள்ளனர். கூட்டத்தொடரில் நேற்று மதிய உணவு இடைவேளையின் போது, முனிரத்னாவை காங்கிரஸ் மூத்த எம்.எல்.சி., ஹரிபிரசாத் சந்தித்து பேசினார். இருவரும், 10 நிமிடங்கள் ஆலோசித்தனர். ஒரே கட்சியில் இருந்தாலும் சிவகுமாருக்கும், ஹரிபிரசாத்துக்கும் பல விஷயங்களில் ஒருமித்த கருத்தில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

