காலாவதியான பொருட்களில் ஐஸ்கிரீம் தயாரிப்பு: பெங்களூரில் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
காலாவதியான பொருட்களில் ஐஸ்கிரீம் தயாரிப்பு: பெங்களூரில் அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
UPDATED : அக் 10, 2026 12:00 AM
ADDED : அக் 09, 2026 11:32 PM
பெங்களூரு: பெங்களூரு உட்பட கர்நாடகாவின் பல்வேறு இடங்களில் உள்ள, 45 ஐஸ்கிரீம் தயாரிப்பு மையங்களில் உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள், அதிரடி சோதனை நடத்தினர். இந்த மையங்களில் காலாவதியான உணவு பொருட்கள இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன.
சுகாதாரத்துறை அமைச்சராக காதர் பொறுப்பேற்ற பின், உணவு பொருட்களின் தரத்தை ஆய்வு செய்து வருகிறார். மேலும், மக்களின் ஆரோக்கியத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொருட்களை கட்டுப்படுத்த, கடும் நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இதற்காக, ஹோட்டல்கள், உணவகங்கள், ரெஸ்டாரென்டுகள், இந்திரா உணவகங்களில் சோதனைகள் நடக்கின்றன.
அழுகிய இறைச்சி
இங்குள்ள சமையல் அறைகள், சுத்தமாக உள்ளனவா, உணவு தயாரிக்க தேவையான காய்கறிகள், மசாலா பொருட்கள் தரமாக உள்ளனவா என்பதை, அதிகாரிகள் ஆய்வு செய்கின்றனர்.
இரண்டு மாதங்களுக்கு முன், ஸ்டார் ஹோட்டல்களின் சமையல் அறைகளில் அழுகிய இறைச்சி, கெட்டுப்போன பால் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். இது, பொதுமக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அத்தகைய ஹோட்டல்கள் மீது, உணவுத்துறை சட்டப்படி நடவடிக்கை எடுத்துள்ளது.
அமைச்சர் காதரின் உத்தரவுபடி, பெங்களூரு உட்பட மாநிலத்தின் பல்வேறு இடங்களில் உள்ள 45 ஐஸ்கிரீம் தயாரிப்பு மையங்களில், உணவு பாதுகாப்பு அதிகாரிகள், நேற்று முன்தினம் அதிரடி சோதனை நடத்தினர்.
அவற்றில், காலாவதியா ன பால், பால் பவுடர், சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் இருந்ததை கண்டறிந்தனர். அவற்றின் மாதிரிகளை சேகரித்து, அரசு ஆய்வகத்துக்கு அனுப்பினர்.
இதுகுறித்து உணவு பாதுகாப்பு, மருந்துகள் கட்டுப்பாட்டு துறை கமிஷனர் சீனிவாஸ் கூறியதாவது:
சுகாதாரத்துறை அமைச்சர் காதரின் உத்தரவுபடி, ஐஸ்கிரீம் தயாரிப்பு மையங்களில், நேற்று முன் தினம் சோதனை நடத்தினோம். அப்போது, பல இடங்களில் தரமற்ற, காலாவதியான பொருட்கள் பயன்படுத்தியது, கண்டறியப்பட்டது.
காலாவதி பொருட்கள்
பெங்களூரின், ஜெயநகர் மூன்றாவது பிளாக்கில் உள்ள, ‘சவாரா ஐஸ்கிரீம் கபே’யில், காலாவதியான மேரி கோல்டு பிரிட்டானியா பிஸ்கட்டுகள், நந்தினி சம்ருத்தி பால், டீ, காபி பொடிகள், கொப்பரை தேங்காய் பொடி உட்பட பல்வேறு பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இந்த கபே மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
பன்னரகட்டா சாலையின் பிலேகஹள்ளியில் உள்ள ‘எம்.என்.என்டர்பிரைசஸ்’ அங்காடியில், காலாவதியான பிளைன் காரமெல், நெஸ்லே மில்க் மெய்டு, மில்க் மிஸ்ட் கோவா பறிமுதல் செய்யப்பட்டது.
ராய்ச்சூரில் உள்ள ஜெமினி ஐஸ்கிரீம் தயாரிப்பு மையத்தில், அசுத்தமான சூழ்நிலை இருந்தது. இந்த மையத்துக்கும் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. இது போன்று, பல இடங்களில் விதிகளை மீறிய, ஐஸ்கிரீம் தயாரிப்பு மையங்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களின் ஆரோக்கியத்தை மனதில் கொண்டு, தொடர்ந்து மாநிலம் முழுதும் சிறப்பு சோதனைகள் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
