ஒரு கட்டுப்பாட்டு அறைக்கு ரூ.50 லட்சமா: அமைச்சர் அதிர்ச்சி
ஒரு கட்டுப்பாட்டு அறைக்கு ரூ.50 லட்சமா: அமைச்சர் அதிர்ச்சி
UPDATED : அக் 10, 2026 04:32 AM
ADDED : அக் 09, 2026 11:32 PM

ஹாசன்: ஹாசனாம்பா கோவில் உத்சவ முன்னேற்பாடுகள் செய்வது குறித்து, மாவட்ட பொறுப்பு அமைச்சர் சிவலிங்கே கவுடா தலைமையில், ஹாசன் கலெக்டர் அலுவலகத்தில், ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. உத்சவ செலவு விபரங்கள் குறித்து, அதிகாரிகளிடம் கேட்டார்.
அப்போது அதிகாரிகள், உற்சவத்துக்கு தேவையான ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்க, 50 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் விடுத்திருப்பதாக கூறினர்.
இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த அமைச்சர் சிவலிங்கே கவுடா, ''ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்க, இவ்வளவு ரூபாயா... 50 லட்சம் ரூபாய் என்றால் அரை கோடி. இவ்வளவு செலவிட்டால் மக்கள் என்ன நினைப்பர்; என்ன பேசுவர்... ஏற்கனவே வறட்சி உள்ளது,'' என்றார்.
அப்போது, கலெக்டர் லதாகுமாரி, அமைச்சரை சமாதானம் செய்ய முயற்சித்தார். இதை அமைச்சர் காதில் வாங்கவில்லை.
நான்கு இடங்களில், கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்ய 65 லட்சம் ரூபாய்க்கு டெண்டர் விடுக்கப்பட்டிருந்ததையும் பார்த்து, அமைச்சர் அதிர்ச்சியில் ஆழ்ந்தார்.
பக்தர்களின் நெரிசலை சமாளிக்க, ஏ.ஐ., டெக்னாலஜி பயன்படுத்த 12 லட்சம் ரூபாய் செலவிடு வதையும் கண்டித்தார்.
கூட்டத்தில் இருந்த ஒப்பந்ததாரர்களிடம், ''பில் தொகையை குறைக்க வேண்டும்,'' என, அமைச்சர் பேரம் பேசினார். ''கடவுளுக் காக செய்கிறீர்கள்... கட்டணத்தை குறையுங்கள். பணி சரியாக இல்லாவிட்டால், நான் பில் தொகையை வழங்க மாட்டேன்,'' என, எச்சரித்தார்.
