லால்பாக் பூங்காவில் பனி பூங்கா தோட்டக்கலைத்துறை திட்டம்
லால்பாக் பூங்காவில் பனி பூங்கா தோட்டக்கலைத்துறை திட்டம்
UPDATED : அக் 16, 2026 12:00 AM
ADDED : அக் 15, 2026 10:34 PM
பெங்களூரு: பெங்களூரின் லால்பாக் பூங்காவில், இயற்கை ஆர்வலர்கள், சுற்றுலா பயணியருக்கு புதிய அனுபவத்தை அளிக்கும் நோக்கில், பனி படர்ந்த பூங்காவை அமைக்க தோட்டக்கலைத்துறை திட்டமிட்டுள்ளது.
இதுகுறித்து, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
லால்பாக் பூங்காவுக்கு, தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர், இயற்கை ஆர்வலர்கள் வருகின்றனர். இவர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்க, தோட்டக்கலைத்துறை திட்டமிட்டுள்ளது.
சிங்கப்பூரின் மெரினா பே பகுதியில் அமைந்துள்ள, 'கார்டன்ஸ் பை தி பே' பூங்கா, உலக பிரசித்தி பெற்றதாகும்.
அதுபோல, லால்பாக் பூங்காவில் பனி பூங்கா உருவாக்க, தோட்டக்கலைத்துறை தயாராகி வருகிறது. லால்பாக் பூங்கா பாறை அருகில் உள்ள, போன்சாய் சதுக்கத்தில் இருந்து, புதிய மியூசியம் கட்டடம் வரையிலான, இரண்டரை ஏக்கரில் பனி பூங்கா அமைக்கப்படும்.
ஏற்கனவே பணிகள் மும்முரமாக நடக்கின்றன. வரும் ஆண்டு குடியரசு தினத்தன்று, பனிப்பூங்கா பொதுமக்களின் பார்வைக்கு வரும். தரையில் கற்களை பொருத்துவது, தண்ணீர் பாய்ச்சும் கருவி பொருத்துவது உட்பட, சில பணிகள் முடிந்துள்ளன. பனியை படர வைக்கும் சாதனம் பொருத்தும் பணி நடக்கிறது.
மழை நீரை சேகரிக்க இதற்கு முன் அமைக்கப்பட்ட கால்வாய்க்கு, புதுப்பொலிவு அளிக்கப்பட்டுள்ளது.
இந்த கால்வாய்க்கு குறுக்கே, 12 இடங்களில் சிறு சிறு தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. நிலத்தடி நீர்மட்டத்தை அதிகரிக்க, பள்ளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கால்வாயின் இரண்டு ஓரங்களிலும், கற்களால் அழகான கட்டடம், படிகள் அமைக்கப்பட்டுள்ளன. கால்வாய் நெடுகிலும் 200 வகையான அபூர்வ செடிகள் நடப்படுகின்றன.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
