ADDED : ஜூலை 18, 2026 11:05 PM

பெங்களூரு: மெட்ரோ ரயில்களில் விதிகளை மீறுவோருக்கு விதிக்கப்படும் அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயிலில் பயணிக்கும் போது, மற்ற பயணியருக்கு இடையூறு ஏற்படும் வகையில், நடப்போருக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
இது தொடர்பாக, மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
மெட்ரோ ரயிலில், மற்ற பயணியருக்கு இடையூறு செய்யும் வகையில் மொபைல் போனில் சத்தமாக பாட்டு கேட்பது, ரீல்ஸ் பார்ப்பது, வீடியோ எடுப்பது, ரயிலுக்குள் சத்தமாக கத்துவது, தரையில் அமருவோருக்கு, முன், 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. தற்போது, 2,500 ரூபாயாக அதிகரிக்கப்பட்டு உள்ளது.
மெட்ரோ வளாகத்தின் சுவர்களில் ஓவியம் வரைதல், போஸ்டர் ஓட்டினால், 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
மெட்ரோவில் முறையான அனுமதியின்றி நுழைவோருக்கு, 250 ரூபாய் அபராதம், மூன்று மாதம் சிறை தண்டனை ஆக இருந்தது. தற்போது, 5,000 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
தண்டவாளத்தில் அத்துமீறி நடந்தால், 20,000 ரூபாய்; டிக்கெட் தொடர்பான மோசடி, போலி டிக்கெட் தயாரிப்பது அல்லது டிக்கெட்களை சட்ட விரோதமாக மற்றவர்களுக்கு மாற்றினால், 25,000 ரூபாய்; மெட்ரோவின் சொத்துகளை சேதப்படுத்தினால் 10,000 ரூபாய்; குடிபோதையில் ரயிலில் பயணித்தால் 2,500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.
இந்த அபராத தொகை, மூன்று ஆண்டுகளுக்கு, ஒரு முறை 10 சதவீதம் அதிகரிக்கும். இந்த விதிகள், பொது போக்குவரத்தை பாதுகாப்பானதாகவும், பயணியருக்கு உகந்ததாகவும் மாற்றுவதை நோக்கமாக கொண்டுள்ளது.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
