/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இந்தியாவிலேயே 2வது நீளமான கேபிள் பாலம்... திறப்பு!: ஷராவதி நீர்த்தேக்கத்தில் 2.12 கி.மீ.,யில் பிரமாண்டம்
/
இந்தியாவிலேயே 2வது நீளமான கேபிள் பாலம்... திறப்பு!: ஷராவதி நீர்த்தேக்கத்தில் 2.12 கி.மீ.,யில் பிரமாண்டம்
இந்தியாவிலேயே 2வது நீளமான கேபிள் பாலம்... திறப்பு!: ஷராவதி நீர்த்தேக்கத்தில் 2.12 கி.மீ.,யில் பிரமாண்டம்
இந்தியாவிலேயே 2வது நீளமான கேபிள் பாலம்... திறப்பு!: ஷராவதி நீர்த்தேக்கத்தில் 2.12 கி.மீ.,யில் பிரமாண்டம்
ADDED : ஜூலை 15, 2025 04:30 AM

ஷிவமொக்கா மாவட்டம், சாகர் தாலுகா சிக்கந்துாரில் உள்ள சவுடேஸ்வரி அம்மன் கோவில் பிரசித்தி பெற்றது. இக்கோவிலுக்கு சாகரில் இருந்து செல்வோர், அம்பரகோட்லு என்ற இடம் வரை வாகனத்தில் சென்று, அங்கிருந்து ஷராவதி நீர்தேக்கத்தில், 'லாஞ்சர்' எனும் படகில் பயணித்து செல்ல வேண்டும். லாஞ்சரில் வாகனங்களை ஏற்றி செல்லும் வசதியும் உள்ளது.
இதையடுத்து, 2018ல், அம்பரகோட்லு - கலசவள்ளி இடையே, 2.12 கி.மீ.,க்கு கேபிள் பாலம் அமைக்க, மத்திய அரசு 473 கோடி ரூபாய் ஒதுக்கியது. 2019ல் பணிகள் துவங்கி, 2025 ஜூலையில் முடிந்தது. இந்தியாவிலேயே இரண்டாவது நீளமான கேபிள் பாலம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இணைப்பு
இப்பாலத்தை, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, நேற்று திறந்து வைத்து, 'சவுடேஸ்வரி தேவி பாலம்' என்று பெயர் சூட்டினார். இதில், அவர் பேசியதாவது:
மலை மாவட்டங்களின் கிரீடத்தில் மற்றொரு ரத்தினமாக அதிநவீன தொழில்நுட்பத்துடன், 423 கோடி ரூபாய் செலவில், இப்பாலம் கட்டப்பட்டுள்ளது.
60 ஆண்டுகளாக இப்பகுதி சகோதர, சகோதரிகளின் கூக்குரலை கேட்டு, மத்திய அரசு நிதி ஒதுக்கியது. இது மாநில வரலாற்றில் என்றும் பதிவு செய்யப்பட்டிருக்கும்.
பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டத்துடனும், முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் ஆசியுடனும், மலை மாவட்ட பகுதி, இன்று வரலாற்று நிகழ்வை கண்டுள்ளது.
இப்பாலம், ஷராவதியில் நீண்ட நாட்களாக பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தை தணிப்பது மட்டுமல்ல, மலை மாவட்டங்கள் மற்றும் கடலோர மாவட்டங்களுக்கு இடையிலான இணைப்பை ஏற்படுத்தும்.
இதன் மூலம் சிக்கந்துார் சவுடேஸ்வரி கோவில் மற்றும் கொல்லுார் மூகாம்பிகை போன்ற ஆன்மிக தலங்களுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
பிரச்னை தீரும்
அடுத்த ஐந்து ஆண்டுகளில், கர்நாடகாவில் 5 லட்சம் கோடி ரூபாய்க்கான மேம்பாட்டு பணிகள் நடக்கும். 10 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பெலகாவி - ஹூனகுந்த் - ராய்ச்சூர் நாற்கர சாலை பணிகள் துரிதப்படுத்தப்படும். பெங்களூரில், 15,000 கோடி ரூபாயில் வட்டச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இதில், 40 சதவீத பணிகள் முடிவடைந்து விட்டன. இதன் மூலம் பெங்களூரு போக்குவரத்து பிரச்னை தீர்க்கப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இவ்விழாவில், முன்னாள் முதல்வர் எடியூரப்பா, மத்திய உணவு, பொது வினியோக துறை அமைச்சர் பிரஹலாத் ஜோஷி, எம்.பி., ராகவேந்திரா, மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா உட்பட பலர் பங்கேற்றனர்.