'மிஷன் ஒலிம்பிக்ஸ்' திட்டத்தில் வீரர்களுக்கு அநீதி
'மிஷன் ஒலிம்பிக்ஸ்' திட்டத்தில் வீரர்களுக்கு அநீதி
ADDED : ஏப் 03, 2026 03:11 AM
ஒலிம்பிக் போட்டிகளில் நம் நாட்டின் சார்பில் பங்கேற்கும் வீரர்களின் பயிற்சி காலத்தில், அவர்களுக்கு நிதியுதவி வழங்குவதற்காக, 'மிஷன் ஒலிம்பிக்ஸ்' திட்டத்தை மத்திய அரசு 2014ல் துவக்கியது. இத்திட்டம் கர்நாடகாவிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க தகுதி வாய்ந்த வீரர்கள், இத்திட்டத்தின் மூலம் பலன் அடைவர். இவர்களுக்கு மாதம், 50,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும்.
இத்திட்டத்தின் மூலம் தகுதி வாய்ந்த வீரர்கள் பயனடையவில்லை; தகுதியற்ற வீரர்களே பயனடைகின்றனர். விளையாட்டு வீரர்களை தேர்வு செய்வதில், அரசியல்வாதிகளின் தலையீடு இருக்கிறது என, விளையாட்டு வீரர்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து, பிரபல சர்வதேச தடகள வீராங்கனை பூவம்மா கூறியதாவது:
மிஷன் ஒலிம்பிக்ஸ் திட்டத்துக்கு வீரர்கள் தேர்வு செய்யப்படும் விதம் அதிர்ச்சி அளிக்கிறது. இத்திட்டத்திற்கு விண்ணப்பித்த பல தகுதி வாய்ந்த வீரர்கள் நிராகரிக்கப்பட்டு உள்ளனர்.
ஆனால், அரசியல்வாதிகளின் செல்வாக்கில் தகுதியற்ற வீரர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். தகுதியான வீரர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. மற்ற மாநிலங்களில், வீரர்கள் தேர்வு சரியாக நடக்கிறது. நானும் விண்ணப்பித்தேன்; எனக்கும் நிதி கிடைக்கவில்லை. அதுபோல, வீரரின் வயதை பார்த்து எடை போடக்கூடாது. அவரின் செயல்திறனை வைத்தே வீரரை எடை போடவேண்டும்.
எனக்கு தெரிந்த தேசிய, மாநில, சர்வதேச அளவிலான பதக்கம் பெற்ற வீரர்கள,் மிஷன் ஒலிம்பிக்ஸ் திட்டத்துக்கு விண்ணப்பித்தனர். அவர்கள் தேர்வு செய்யப்படவில்லை. இது, அதிர்ச்சி அளிக்கிறது. சர்வதேச அளவில் பதக்கம் பெற்ற வீரர்கள் தேர்வு செய்யப்படவில்லை என்றால், வேறு யாரை தேர்வு செய்ய போகின்றனர் என்பது தெரியவில்லை.
கர்நாடகாவில் விளையாட்டு துறையில், மிகப்பெரிய அரசியல் நடக்கிறது. இதை கண்டும், காணாமல் மாநில அரசு செயல்படுகிறது. பல வீரர்களும் அரசை எதிர்த்து குரல் கொடுப்பதற்கு தயங்குகின்றனர். இதனாலே, இந்த விவகாரம் வெளிச்சத்திற்கு வரவில்லை. இருப்பினும், விரைவில் நீதி கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- நமது நிருபர் -
