/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பிரமாண்ட பிரிவுபசார விழா இன்ஸ்பெக்டரால் சர்ச்சை
/
பிரமாண்ட பிரிவுபசார விழா இன்ஸ்பெக்டரால் சர்ச்சை
ADDED : ஏப் 25, 2025 05:38 AM

துமகூரு: காஷ்மீரில் அப்பாவி மக்கள் சுட்டு கொல்லப்பட்டதால், நாடே வேதனையில் இருக்கும் நிலையில், இன்ஸ்பெக்டர் ஒருவர், பிரிவு உபசார விழாவை பிரமாண்டமாக கொண்டாடியது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த 22ம் தேதி பயங்கரவாதிகள், அப்பாவி மக்கள் 28 பேரை துப்பாக்கியால் சுட்டு கொன்றனர். இவர்களில் இருவர் கர்நாடகாவை சேர்ந்தவர்கள். இந்த சம்பவத்தால் நாடே வேதனையில் உள்ளது.
துமகூரு ரூரல் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தினேஷ்குமார். இவர் குடகு குஷால் நகர் சர்க்கிள் இன்ஸ்பெக்டராக, சமீபத்தில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு நேற்று முன்தினம் இரவு பிரிவு உபசார நிகழ்ச்சியை, குடிமக்கள் நல குழு, முற்போக்கு கன்னட அமைப்புகள் நடத்தின.
இதில் பங்கேற்ற தினேஷ்குமார் திறந்த ஜீப்பில், ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். அவருக்கு கிரேன் மூலம் பிரமாண்ட மாலை அணிவிக்கப்பட்டது. ஏதோ அரசியல்வாதி போன்று, தினேஷ்குமாரின்நடவடிக்கை இருந்தது.
இதுதொடர்பான வீடியோ சமூக வலை தளத்தில் வெளியானது. வீடியோவை பார்த்து அதிர்ச்சி அடைந்த நெட்டிசன்கள், இன்ஸ்பெக்டர் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை வைத்து உள்ளனர்.
துமகூரு, உள்துறை அமைச்சர் பரமேஸ்வரின் சொந்த மாவட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.

