/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரு - துமகூரு இடையே இன்டர்சிட்டி மெட்ரோ ரயில்?
/
பெங்களூரு - துமகூரு இடையே இன்டர்சிட்டி மெட்ரோ ரயில்?
பெங்களூரு - துமகூரு இடையே இன்டர்சிட்டி மெட்ரோ ரயில்?
பெங்களூரு - துமகூரு இடையே இன்டர்சிட்டி மெட்ரோ ரயில்?
ADDED : மே 17, 2025 11:12 PM

துமகூரு: “பெங்களூரில் இருந்து துமகூரு வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படும்,” என, மத்திய ரயில்வே இணை அமைச்சர் சோமண்ணா கூறியுள்ளார்.
பெங்களூரில் தற்போது பசுமை வழித்தடத்தில் சில்க் இன்ஸ்டிடியூட் முதல் மாதவரா வரை, மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மாதவராவில் இருந்து துமகூரு 51 கி.மீ., துாரத்தில் உள்ளது.
பெங்களூருக்கு மிக அருகில் உள்ள மாவட்டம் என்பதால், துமகூரு வரை மெட்ரோ ரயில் சேவையை நீட்டிக்கலாம் என்று அரசிடம், மெட்ரோ ரயில் நிர்வாக அதிகாரிகள் முன்மொழிந்தனர். மாதவராவில் இருந்து துமகூரு வரை, மெட்ரோ ரயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய, அரசு உத்தரவிட்டிருந்தது.
இதையடுத்து மாதவராவில் இருந்து துமகூரு வரை மெட்ரோ ரயில் பாதை அமைப்பது பற்றி, மெட்ரோ ரயில் நிர்வாகம் ஆய்வு செய்து, அரசிடமும் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த முன்மொழிவு குறித்து பெங்களூரு தெற்கு பா.ஜ., - எம்.பி., தேஜஸ்வி சூர்யா, தன் 'எக்ஸ்' பக்கத்தில் வெளியிட்ட பதிவு:
துமகூரு வரை மெட்ரோவை நீட்டிக்கும் கர்நாடக அரசின் யோசனை முட்டாள்தனமானது.
அதற்கு பதிலாக பெங்களூரில் நிலுவையில் உள்ள மெட்ரோ பணிகளை விரைவாக முடிக்கவும், நகரில் மெட்ரோ வலையமைப்பை மேலும் விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.
துமகூருக்கு புறநகர் ரயில் திட்டத்தை செயல்படுத்தலாம்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னாள் ஐ.பி.எஸ்., அதிகாரியும், பா.ஜ., பிரமுகருமான பாஸ்கர் ராவும் துமகூரு வரை மெட்ரோவை நீட்டிக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
'மெட்ரோ, புறநகர், இன்டர்சிட்டி, எக்ஸ்பிரஸ் ரயில்களுக்கு இடையிலான வித்தியாசமே அரசுக்கு தெரியவில்லை.
இவர்கள் நினைத்தால் பெங்களூரில் இருந்து விஜயபுரா, பெலகாவி வரை கூட மெட்ரோ சேவையை விரிவுபடுத்துவர் போல' என, 'எக்ஸ்' தளத்தில் பாஸ்கர் ராவ் பதிவிட்டுஉள்ளார்.
ஆனால், இந்த விவகாரம் குறித்து துமகூரு பா.ஜ., - எம்.பி.,யும், மத்திய ரயில்வே இணை அமைச்சருமான சோமண்ணா கூறியதாவது:
துமகூரு வரை மெட்ரோ சேவை நீட்டிக்கப்படும். மத்தியில் உள்ள ஆட்சியின் பதவிக்காலம் முடிவதற்குள் துமகூருக்கு மெட்ரோ வந்துவிடும். துமகூரு மக்களுக்கு ஒரு மாதத்தில் மகிழ்ச்சியான செய்தி அளிப்போம். பெங்களூருக்கு அடுத்தபடியாக துமகூரு 2வது பெரிய நகரமாக மாறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெங்களூரில் இருந்து துமகூரு வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டால், முதல் இன்டர்சிட்டி மெட்ரோ ரயில் சேவை என்ற பெருமை இந்த வழித்தடத்துக்கு கிடைக்கும்.