காட்டு யானை தாக்கியதில் ஐ.பி.எஸ்., அதிகாரியின் மனைவி பலி
காட்டு யானை தாக்கியதில் ஐ.பி.எஸ்., அதிகாரியின் மனைவி பலி
ADDED : ஜூன் 06, 2026 03:55 AM

குடகு: துபாரே வளர்ப்பு யானைகள் முகாமில், யானை தாக்கி பெண் இறந்த சம்பவம் போல, மற்றொரு சம்பவம் நடந்துள்ளது. காட்டு யானை தாக்குதலுக்கு போலீஸ் உயரதிகாரியின் மனைவி பலியானார்.
குடகு மாவட்டத்தின், பரகடகேரி கிராமத்தை சேர்ந்த சுனில் அச்சைய்யா, டில்லியில் மத்திய அரசின், 'ரா' உளவு பிரிவில் ஐ.ஜி.,யாக பணியாற்றுகிறார். குடும்பத்துடன் டில்லியில் வசிக்கிறார்.
குடகு மாவட்டம், பொன்னம்பேட் தாலுகாவின் திதிமிதி அருகில் உள்ள கோனனஹள்ளி கிராமத்தில், சுனில் அச்சையாவின் உறவினர் இல்லத்தின் நிகழ்ச்சியில் பங்கேற்க, அவரது மனைவி சந்தியா, 51, டில்லியில் இருந்து வந்து இருந்தார்.
இதே கிராமத்தில் இவர்களுக்கு சொந்தமான எஸ்டேட் உள்ளது. சந்தியா தினமும் காலை, நடை பயிற்சி செய்து விட்டு, எஸ்டேட்டை பார்ப்பது வழக்கம்.
அதே போன்று, நேற்று காலை 9:30 மணிக்கு உறவினர்கள் சிலருடன் தோட்டத்துக்கு செல்லும் போது, காட்டு யானை எதிரே வந்தது. இதை கண்டு சிதறி ஓடினர்.
ஆனால் சந்தியா, யானையிடம் சிக்கி கொண்டார். அவரை யானை பலமாக தாக்கியது. மற்றவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். பலத்த காயமடைந்த அவரை, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால், வழியில் அவர் உயிரிழந்தார்.
சம்பவ இடத்தை வனத்துறையினர் பார்வையிட்டனர். தகவலறிந்து விராஜ்பேட் காங்கிரஸ் எம்.எல்.ஏ., பொன்னண்ணா, மருத்துவமனைக்கு வந்து, சந்தியாவின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
