எம்.எல்.ஏ.,வாகி ஒரு மாதம் கூட ஆகல! அமைச்சர் பதவியை எதிர்பார்க்கும் சமர்த்
எம்.எல்.ஏ.,வாகி ஒரு மாதம் கூட ஆகல! அமைச்சர் பதவியை எதிர்பார்க்கும் சமர்த்
ADDED : ஜூன் 02, 2026 01:16 AM

தாவணகெரே: ''அமைச்சர் பதவி கிடைத்தால் வேண்டாம் என்று சொல்லமாட்டேன்,'' என தாவணகெரே தெற்கு காங்கிரஸ் எம்.எல்.ஏ., சமர்த் தெரிவித்தார்.
கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் சிவகுமார், நாளை முதல்வராக பதவியேற்கிறார். இதில் பலரும் அமைச்சர் பதவியை எதிர்பார்க்கின்றனர். தாவணகெரே தெற்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சமர்த்தும் அமைச்சர் பதவி எதிர்பார்க்கிறார்.
தாவணகெரேயில் நேற்று அவர் அளித்த பேட்டி:
எனக்கு அமைச்சர் பதவி கிடைத்தால், வேண்டாம் என்று சொல்ல மாட்டேன். அமைச்சர் பதவி கிடைத்தால், தொகுதி வளர்ச்சிக்காக, மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து கூடுதல் நிதியை பெற்றுத் தருவேன். எனக்கு அதிகாரம் இருந்தால், மக்களின் பணிகளை இன்னும் வேகமாக செய்ய முடியும்.
முதன் முறையாக எம்.எல்.ஏ., ஆனவர்களுக்கு அமைச்சர் பதவி வழங்க வேண்டுமா, வேண்டாமா என்பதை கட்சி மேலிடம் முடிவு செய்யும்.
அவர்கள் எடுக்கும் முடிவை நாங்கள் ஏற்றுக்கொள்வோம். அரசியலில் உள்ள அனைவரும் மக்களுக்கு சேவை செய்ய ஒரு பெரிய பொறுப்பை விரும்புவர். எனக்கும் அந்த விருப்பம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
தாவணகெரே தெற்கு தொகுதி இடைத்தேர்தல் ஏப்ரல் மாதம் நடந்தது. முடிவுகள் கடந்த மாதம் 4ம் தேதி வெளியாகின. எம்.எல்.ஏ.,வாகி ஒரு மாதம் கூட ஆகாத சூழ்நிலையில் அமைச்சர் பதவியை எதிர்பார்ப்பது குறிப்பிடத்தக்கது.
