திடீர் மழையால் கொசுக்கள் அதிகரிப்பு: காய்ச்சலால் பாதிக்கப்படும் சிறார்கள்
திடீர் மழையால் கொசுக்கள் அதிகரிப்பு: காய்ச்சலால் பாதிக்கப்படும் சிறார்கள்
ADDED : ஜூன் 02, 2026 01:16 AM
பெங்களூரு: பெங்களூரில் அவ்வப்போது மழை பெய்தது, வானிலை மாற்றம் போன்ற காரணங்களால், தொற்று நோய் பரவுகிறது. குறிப்பாக காய்ச்சலால் பாதிக்கப்படும் சிறார்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கோடை வெப்பத்தால் தகித்த பெங்களூரில், மழை பெய்து வருவதால் குளிர்ச்சியாக மாறியுள்ளது. தினமும் மாலையானால் மழை பெய்கிறது. மழை மற்றும் வானிலை மாற்றத்தால் தொற்று நோய் பரவுகிறது.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனைகளுக்கு வரும் குழந்தைகள் எண்ணிக்கை, தொடர்ந்து அதிகரிக்கிறது. குழந்தைகளின் உடல் நலனில் கவனம் தேவையென, வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.
பெங்களூரு மட்டுமின்றி மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இதே சூழ்நிலை நிலவுகிறது. தண்ணீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தி அதிகரிக்கிறது. எனவே டெங்கு காய்ச்சல், சிறார்களை பாதித்துள்ளது. விஷக்காய்ச்சல் பாதிப்பு அளவும், 15 முதல் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
வரும் நாட்களில் டெங்கு அதிகரிக்கும் அபாயம் உள்ளது. இருமல், தொண்டை வலி, சளி, வாந்தி போன்ற நோய் அறிகுறிகள் இருந்தால், உடனடியாக மருத்துவமனைக்கு சென்று, பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
வீட்டின் சுற்றுப்பகுதிகளை, சுத்தமாக வைத்திருக்க வேண்டும். தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என, சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
