ஜெயநகர், சி.வி.ராமன் அரசு மருத்துவமனையில் தனியார் பங்களிப்புடன் அமையும் ஆய்வகங்கள்
ஜெயநகர், சி.வி.ராமன் அரசு மருத்துவமனையில் தனியார் பங்களிப்புடன் அமையும் ஆய்வகங்கள்
ADDED : ஜூன் 02, 2026 01:16 AM

பெங்களூரு: விரைவில் நோயை கண்டுபிடித்து, தேவையான சிகிச்சை அளிக்க வசதியாக, தாமதமின்றி அறிக்கை பெறும் வகையில், அரசு மருத்துவமனைகளில், தனியார் ஒருங்கிணைப்புடன் ஆய்வகம் அமைக்க, கர்நாடக சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. முதற்கட்டமாக ஜெயநகர் மற்றும் சி.வி.ராமன் மருத்துவமனையில் ஆய்வகங்கள் அமைக்கப்படுகின்றன.
இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:
நோயாளிகளை குணமாக்குவதில், ஆய்வக அறிக்கை முக்கிய பங்கு வகிக்கிறது. அறிக்கை தாமதமானால், நோயை கண்டுபிடிப்பதிலும் தாமதமாகும். இதன் விளைவாக நோய் முற்றி, நோயாளி அபாயத்தில் சிக்கக்கூடும். இதை மனதில் கொண்டு, அரசு மருத்துவமனைகளில் தனியார் ஒருங்கிணைப்பில் ஆய்வகம் அமைக்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
பணி அதிகரிப்பு பெங்களூரின், முக்கியமான சில அரசு மருத்துவமனைகளில், ஆய்வகங்கள் உள்ளன. ஆனால் அரசு மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வரும் நோயாளிகள் எண்ணிக்கை, ஆண்டுக்கு ஆண்டு அதிகரிக்கிறது. இந்த மருத்துவமனைகளில் பணி அதிகரிக்கிறது. எனவே அரசு ஆய்வகங்களில் அறிக்கை கிடைப்பது தாமதமாகிறது. மருத்துவ அறிக்கை விரைந்து கிடைத்தால் மட்டுமே, நோய்களை அடையாளம் கண்டு, சிகிச்சையளித்து குணப்படுத்த முடியும்.
சோதனை மற்றும் ஆய்வகங்களுக்கான தேசிய அங்கீகார வாரியத்தின் அங்கீகாரம் பெற்றுள்ள ஹெச்.எல்.எல்., லைப் கேர் லிமிடெட் நிறுவனம், சி.வி.ராமன் மருத்துவமனையில், ஆய்வகம் அமைக்க முன் வந்துள்ளது. ஆய்வகம் அமைக்க 2,400 முதல் 3,600 சதுர அடி இடம் தேவைப்படும். நிறுவனத்தின் பிரதிநிதிகள், மருத்துவமனைக்கு வந்து இடத்தை பரிசீலித்தனர்.
அரசு மருத்துவமனையில் அறிக்கை கிடைப்பது தாமதமாவதால் தனியார் ஆய்வகத்துக்கு செல்ல வேண்டியுள்ளது. அங்கு அதிகமான கட்டணம் வசூலிக்கின்றனர். இது ஏழை நோயாளிகளுக்கு சுமையை ஏற்படுத்துகிறது. அரசு சார்பில் ஆய்வகம் அமைத்தால், அவர்களுக்கு உதவியாக இருக்கும்.
வாய்ப்பு வேறு அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் கிளினிக்குகளில், டாக்டர்கள் எழுதி கொடுத்த ஆய்வுகளையும், புதிதாக அமைக்கப்படும் ஆய்வகங்களில் செய்து கொள்ள வாய்ப்பளிக்கப்படும்.
சி.வி.ராமன் மருத்துவமனை சுற்றுப்பகுதிகளில், அமைப்பு சாரா தொழிலாளர்கள் வசிக்கின்றனர். தமிழகம், வட மாநிலங்களின் கட்டட கட்டுமான தொழிலாளர்களும் உள்ளனர். இவர்கள் குறைந்தபட்ச கட்டணம் செலுத்துவதற்கு கூட கஷ்டப்படுகின்றனர். இவர்களுக்கு இந்த ஆய்வகம் மிகவும் உதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
