UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 09:52 PM

– நமது நிருபர் –
பொதுவாக அய்யங்கார் பாணி சமையலில் தனித்துவமும், மணமும் இருக்கும். அவர்கள் தாளிக்கும் வாசமே, நாவில் எச்சில் ஊற வைக்கும். குறிப்பாக அவர்கள் செய்யும் வாழைக்காய் பொடிமாஸ், மிகவும் சுவையாக இருக்கும். அதை எப்படி செய்வது என, பார்க்கலாமா?
செய்முறை:
முதலில் இட்லி குக்கரில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். வாழைக்காயை குக்கரில் வைத்து, எட்டு, ஒன்பது நிமிடங்கள ஆவியில் வேக வைக்கவும். வாழைக்காய் ஆறியதும், தோலை உரித்து கொள்ளவும். இதை சிறு, சிறு துண்டுகளாக நறுக்கவும். அல்லது துருவிக்கொள்ளவும். இதில் தேங்காய் துருவல், உப்பு சேர்த்து நன்றாக கலக்கவும்.
அடுப்பில் வாணலியை வைத்து, தேங்காய் எண்ணெய் ஊற்றவும். சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப்பருப்பு, கறிவேப்பிலை போட்டு வதக்கவும். நறுக்கிய பச்சை மிளகாய், சுக்கு பொடியை சேர்க்கவும். அதன்பின் பெருங்காயம் சேர்த்து கிளறவும்.
அடுப்பை மிதமான தீயில் வைத்து, வாழைக்காய், தேங்காய் கலவையை போட்டு கிளறி, இரண்டு நிமிடம் வேக வைக்கவும். அதன்பின் அடுப்பை நிறுத்திவிட்டு, வாழைக்காயில் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறினால். சூப்பரான வாழைக்காய் பொடிமாஸ் தயார்.
சாம்பர் சாதம், ரசம் சாதத்துக்கு தொட்டுக் கொள்ள பொருத்தமாக இருக்கும். காரம் குறைவாக இருப்பதால், குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர்.
