UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 09:52 PM
பெலகாவி: சிறையில் உள்ள கைதி ஜோடி திருமணம் செய்து கொள்ள, ஒரு நாள் மட்டும் பரோல் வழங்கி, கர்நாடக உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பெலகாவி மாவட்டம், மூடலகி தாலுகாவின், பைரநட்டி கிராமத்தை சேர்ந்தவர் சித்தவ்வா, 35. இவருக்கு திருமணமாகி கணவர் இருந்தும், அதே கிராமத்தில் வசிக்கும் ஸ்ரீதர், 38, என்பவருடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்தார். இது கணவருக்கு தெரிந்ததால், திட்டி கண்டித்தார்.
இதே காரணத்தால், சித்தவ்வாவும், ஸ்ரீதரும் சேர்ந்து சித்தவ்வாவின் கணவரை கொலை செய்தனர். இவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்களின் குற்றம் உறுதியானதால், இருவருக்கும் ஆயுள் தண்டனை விதித்து, நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. தற்போது இவர்கள் பெலகாவியின் ஹிண்டல்கா சிறையில், தண்டனை அனுபவிக்கின்றனர்.
இதற்கிடையே சித்தவ்வாவும், ஸ்ரீதரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இதற்காக 90 நாட்கள் பரோல் அளிக்கும்படி, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
மனுவை விசாரித்த நீதிமன்றம், 90 நாட்கள் பரோல் அளிக்க மறுத்தது. ஒரு நாள் மட்டும் பரோல் அளித்து, நேற்று முன் தினம் உத்தரவிட்டது.
‘மனுதாரர்கள் கொலை வழக்கில் தண்டனைக்கு ஆளானவர்கள். தற்போது திருமணத்துக்காக பரோல் கேட்கின்றனர். கைதிகள் திருமணம் செய்து கொள்ள சட்டத்தில் எந்த தடையும் இல்லை. அவர்களின் உரிமையை மறுக்க முடியாது. கைதிகள் தங்களின் குடும்பம் மற்றும் சமூக உறவுகளை தக்க வைத்து கொள்ள, அவர்களின் மறு வாழ்வுக்கு பரோல் உதவும்.
‘சிறையில் அவர்களின் நடவடிக்கை பற்றி, எந்த குற்றச்சாட்டும் இல்லை. எனவே அவர்கள் திருமணம் செய்து கொள்ள, ஒரு நாள் மட்டும் பரோல் அளிக்கப்படும். திருமணம் நடக்கும் நாளன்று, காலை 10:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை பரோல் இருக்கும். திருமணத்தின் போது, போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும். அன்று மாலை 5:00 மணிக்குள் கைதிகள், சிறைக்கு திரும்ப வேண்டும்’ என நீதிமன்றம் உத்தரவிட்டது.
