ADDED : ஜூலை 21, 2026 03:02 AM

பெங்களூரு: தமிழக முதல்வர் விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படம், வரும் 23ம் தேதி வெளியாகிறது.
இப்படத்திற்கான டிக்கெட் முன்பதிவு கடந்த 19ம் தேதி துவங்கியது. பெங்களூரில் 23ம் தேதி காலை 6:00 மணிக்கு திரையிடப்படும் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையானது.
இதை பயன்படுத்தி கொண்ட தியேட்டர் உரிமையாளர்கள் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கெட் கட்டணத்தை கடுமையாக உயர்த்தி உள்ளனர். பெரும்பாலான தியேட்டர்களில் 1,000 ரூபாய்க்கு மேல் டிக்கெட் விற்பனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
அதேசமயம், மல்டிபிளக்ஸ் திரையரங்குகளில் டிக்கெட் கட்டணம் விண்ணை தொட்டு உள்ளது. பெரும்பாலான மல்டிபிளக்ஸ்களில் டிக்கெட் விலை 2,000 ரூபாய்க்கு மேல் விற்பனையாகி உள்ளது.
எலஹங்காவில் உள்ள மால் ஆப் ஏசியாவில் டிக்கெட் கட்டணம் 2,100; ராஜ்குமார் ரோடு ஓரியன் மாலில் 2,100; ஒயிட்பீல்டு பீனிக்ஸ் மாலில் 2,200; கனகபுரா ரோடு போரம் மாலில் 2,200; கோரமங்களா நெக்சஸ் மாலில் 2,600 ரூபாய்க்கு டிக்கெட்டுகள் விற்பனையாகின்றன. இது, விஜய் ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
டிக்கெட்டுகள் வேகமாக விற்பனையாகி வருவதால், வரும் நாட்களில் டிக்கெட் கட்டணம் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
மல்டிபிளக்ஸ் உட்பட அனைத்து தியேட்டர்களிலும் அதிகபட்ச டிக்கெட் கட்டணம் 200 ரூபாயாக நிர்ணயித்த மாநில அரசின் உத்தரவுக்கு, ஐகோர்ட் இடைக்கால தடை விதித்ததே, டிக்கெட் விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது.
