/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
அரசு கட்டுப்பாட்டில் வந்தது காளி ஆஞ்சநேயர் கோவில்
/
அரசு கட்டுப்பாட்டில் வந்தது காளி ஆஞ்சநேயர் கோவில்
ADDED : ஜூலை 10, 2025 11:04 PM

பெங்களூரு: பிரசித்தி பெற்ற காளி ஆஞ்சநேயர் கோவிலை, ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து, கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு - மைசூரு சாலையில் பேட்ராயனபுராவில், காளி ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இது பிரசித்தி பெற்றது. பெங்களூரின் முக்கியமான திருத்தலங்களில் இதுவும் ஒன்று. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இதனால் கோவிலுக்கு கிடைக்கும் வருவாயும் அதிகரிக்கிறது.
உண்டியலில் வசூலாகும் காணிக்கை பணம், கோவிலின் நிர்வகிப்பு, திருப்பணிகள் உட்பட, மற்ற தேவைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது. ஆனால் சமீப நாட்களாக உண்டியல் பணத்தை, கோவில் நிர்வாகத்தின் சிலர், கையாடுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி, வெளிச்சத்துக்கு வந்தது. இது அரசின் கவனத்துக்கும் சென்றது.
இதுகுறித்து விசாரணை நடத்தும்படி, அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது. இதன்படி அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டபோது, திருட்டு நடப்பது உறுதியானதால், கோவில் நிர்வாகத்தை அரசே ஏற்க வேண்டும் என, பரிந்துரை செய்தது. இதை ஏற்றுக்கொண்ட அரசும், காளி ஆஞ்சநேயர் கோவிலை, அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.
இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது:
கோவில்களில் விதிமீறல்கள் நடந்தால், நிர்வாகத்தில் குளறுபடிகள் சம்பந்தப்பட்ட கோவிலை அரசு வசம் பெற்றுக்கொள்ள, சட்டத்தில் இடம் உள்ளது.
இப்போது காளி ஆஞ்சநேயர் கோவிலிலும், முறைகேடு நடப்பதால் இக்கோவிலை ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் ஒப்படைத்து, அரசு உத்தரவிட்டுள்ளது.
கோவில்களின் பணம், சொத்துக்களை காப்பாற்றுவது, அரசின் கடமையாகும். இனி காளி ஆஞ்சநேயர் கோவில், ஹிந்து அற நிலையத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும். குற்றஞ் சாட்டப்பட்ட கோவில் நிர்வாக உறுப்பினர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநிலத்தின் அனைத்து கோவில்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது, வங்கி கணக்குகள் மூலம் பணப்பரிமாற்றம் நடத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். காலகாலத்துக்கு வரவு, செலவுகள் குறித்து, ஆடிட் செய்யப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.