UPDATED : அக் 28, 2026 12:00 AM
ADDED : அக் 27, 2026 11:06 PM

பெங்களூரு: ‘‘தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்புகளில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும்,’’ என, அமைச்சர் சந்தோஷ் லாட் தெரிவித்து உள்ளார்.
பெங்களூரில் உள்ள ஐ.டி., நிறுவனங்களில் கன்னடர்கள் புறக்கணிக்கப்படுவதாக இளம்பெண் ஒருவர் சமீபத்தில் வீடியோ வெளியிட்டிருந்தார். இந்த வீடியோவை பலரும் ஆதரித்து, கருத்து தெரிவித்திருந்தனர். இவ்விவகாரத்தில், ஐ.டி., நிறுவனங்களின் உரிமையாளர்களை முதல்வர் சிவகுமார் எச்சரித்தார்.
ஏற்கனவே, தனியார் நிறுவனங்களில் கன்னடர்களுக்கு கட்டாய இட ஒதுக்கீடு வழங்கும் வகையிலான மசோதாவை தாக்கல் செய்ய கடந்த ஆண்டு ஜூலையில் அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.
இந்த மசோதாவுக்கு தனியார் நிறுவன உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
மசோதாவை அமல்படுத்துவதில் ஏராளமான சட்ட சிக்கல்கள் இருப்பதாக கூறப்பட்டது. இதனால், மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்படவில்லை; தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இது குறித்து, தொழிலாளர்நலன் துறை அமைச்சர் சந்தோஷ் லாட் கூறியதாவது:
தனியார் நிறுவனங்களில் பணிகள் வழங்குவதில் கன்னடர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். இது குறித்து, முதல்வர் சிவகுமாரிடம் விரைவில் பேச்சு நடத்தப்படும்.
அரசு தொழிற்சாலை, நிறுவனங்களுக்கு நிலம், மின்சாரம், தண்ணீர் வழங்குகிறது. இதற்கு கைமாறாக உள்ளூர் மக்களுக்கு வேலை வழங்கவும். கன்னடர்களின் தகுதிகளுக்கு ஏற்ப வேலைகள் வழங்கப்படவும் வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
