/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மைசூரிலும் கடை பெயர் பலகைகளில் கன்னடம்.. கட்டாயம்!: மீறினால் உரிமம் ரத்தாகும் என எச்சரிக்கை
/
மைசூரிலும் கடை பெயர் பலகைகளில் கன்னடம்.. கட்டாயம்!: மீறினால் உரிமம் ரத்தாகும் என எச்சரிக்கை
மைசூரிலும் கடை பெயர் பலகைகளில் கன்னடம்.. கட்டாயம்!: மீறினால் உரிமம் ரத்தாகும் என எச்சரிக்கை
மைசூரிலும் கடை பெயர் பலகைகளில் கன்னடம்.. கட்டாயம்!: மீறினால் உரிமம் ரத்தாகும் என எச்சரிக்கை
ADDED : அக் 21, 2025 04:24 AM

மைசூரு: 'மைசூரு மாநகராட்சி எல்லைக்குள் உள்ள கடைகளின் பெயர் பலகைகளில், 60 சதவீதம் கன்னடம் கட்டாயம் இருக்க வேண்டும். இதை மீறுவோரின் கடை உரிமம் ரத்து செய்யப்படுவதுடன், கடைக்கு சீல் வைக்கப்படும்' என்று மைசூரு மாநகராட்சி எச்சரிக்கை விடுத்து உள்ளது. தமிழகம், கேரளாவில் பொது இடங்கள், கடைகளின் பெயர் பலகைகள், கி.மீ., கல்லில் அந்தந்த மாநில மொழியில் எழுதப்பட்டிருக்கும். இவ்விரு மாநிலங்களும் தங்கள் மொழி, கலாசாரத்தை விட்டுக்கொடுக்காமல் உள்ளன.
பெங்களூரில் அமல் ஆனால், இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப நகரமான பெங்களூரில், அனைத்து மொழி பேசுபவர்களும் வசித்து வருகின்றனர். அண்டை மாநிலங்களில் இருந்து இங்கு வந்து கடைகள் நடத்தி வருகின்றனர்.
பன்னாட்டு நிறுவனங்களும் இங்கு அலுவலகம் திறந்துள்ளன. ஆனால், இக்கடைகள், நிறுவனங்களின் பெயர் பலகைகளில் ஆங்கிலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு உள்ளது. மாநில மொழியான கன்னடத்துக்கு முக்கியத்துவம் தரப்படவில்லை.
இதையடுத்து, சில கன்னட அமைப்பினர் கடந்தாண்டு நடத்திய போராட்டத்தை அடுத்து, பெங்களூரில் உள்ள அனைத்து கடைகள், வணிக கட்டடங்கள், நிறுவனங்களின் பெயர் பலகைகளில், 60 சதவீதம் கன்னட மொழி இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டு, 2024 பிப்., 29 முதல் அமலுக்கு வந்தது.
இதுபோன்று மைசூரு மாநகராட்சியிலும் அமல்படுத்த வேண்டும் என்று பல நாட்களாக கன்னட அமைப்பினர், ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
கமிஷனர் அறிக்கை இந்நிலையில், மைசூரு மாநகராட்சி கமிஷனர் ஷேக் தன்வீர் ஆசிப் வெளியிட்டுள்ள அறிக்கை:
மைசூரு மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட அனைத்து கடைகள், வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில், 60 சதவீதம் கன்னட மொழி இடம் பெற்றிருக்க வேண்டும். தேவையெனில் கீழ் பகுதியில் 40 சதவீதம் ஆங்கில மொழி இருக்கலாம்.
பொது இடங்களில் கன்னட மொழியையும், அதன் முக்கியத்துவத்தையும் தக்கவைத்து கொள்வதை உறுதி செய்ய, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக முன்னரே ஆலோசனை வழங்கப்பட்டது. ஆனாலும் பல வணிக நிறுவனங்களில், ஆங்கிலம் ஆதிக்கம் செலுத்தும் பெயர் பலகைகளையே காண முடிகிறது.
இந்த உத்தரவை மீறுபவர்களின் கடை உரிமம் ரத்து செய்யப்படும். பின், அவர்களின் கடைகள், நிறுவனங்களுக்கு, 'சீல்' வைக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
கைகோர்ப்பு மைசூரு ஹோட்டல் உரிமையாளர்கள் சங்க தலைவர் நாராயண கவுடா கூறியதாவது:
வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகளில், 60 சதவீதம் கன்னட மொழி இருக்க வேண்டும் என்ற மாநகராட்சியின் உத்தரவை வரவேற்கிறோம். இந்த உத்தரவு, கன்னடத்தை மேம்படுத்துவதற்கான கலாசார பொறுப்பை பிரதிபலிக்கிறது. ஹோட்டல்களும், வணிக நிறுவனங்களும் தாமதமின்றி இதை ஏற்க வேண்டும்.
எங்கள் வர்த்தகர்கள் கன்னடத்துக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். இந்த முயற்சியை முழு மனதுடன் ஆதரிக்க வேண்டும். 60 சதவீதம் கன்னடத்தை பிரதிபலிக்கும் வகையில் பெயர் பலகைகளை புதுப்பிப்பது சட்டப்பூர்வ தேவை மட்டுமல்ல, பெருமைக்குரிய விஷயம்.
அதுபோன்று, நகர் முழுதும் அங்கீகரிக்கப்படாத நடைபாதை கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவற்றை அகற்றுவதன் மூலம், வரி செலுத்தி சட்டத்துக்கு உட்பட்டு செயல்படும் உரிமம் பெற்ற வணிகர்களுக்கு நீதி வழங்க வேண்டும்.
இதன் மூலம் சுற்றுலா பயணியரை, நகரம் ஈர்க்கும். மாநிலத்தின் மொழி, கலாசாரத்தை பாதுகாப்பதில் மைசூரு மாநகராட்சியுடன் நாங்கள் கைகோர்த்து செயல்பட தயாராக இருக்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.