பசவண்ணர் பற்றி சர்ச்சை கருத்து எதிரொலி பசவ மண்டபம் புத்தகத்துக்கு கர்நாடக அரசு தடை
பசவண்ணர் பற்றி சர்ச்சை கருத்து எதிரொலி பசவ மண்டபம் புத்தகத்துக்கு கர்நாடக அரசு தடை
ADDED : நவ 20, 2026 04:26 AM

பெங்களூரு: பசவண்ணர் பற்றி சர்ச்சை கருத்துகளை ரவி ஹஞ்ச் என்பவர் எழுதியுள்ளதாக கூறி, பசவ மண்டபம் புத்தகத்தை பறிமுதல் செய்ய, கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
லிங்காயத் சமூக நெறியின் நிறுவனராகவும், 12ம் நுாற்றாண்டின் சமூக சீர்திருத்தவாதியாகவும் பசவண்ணர் அறியப்படுகிறார். இவரை லிங்காயத் சமூக மக்கள் தெய்வமாக போற்றுகின்றனர்.
இந்நிலையில் தாவணகெரேயை சேர்ந்தவரும், அமெரிக்காவில் வசிப்பவருமான ரவி ஹஞ்ச் என்பவர், ‘பசவ மண்டபம்’ என்ற பெயரில் புத்தகத்தை எழுதி, கடந்த 15ம் தேதி வெளியிட்டார். முன்னதாக 13ம் தேதி, ‘யூ – டியூப் சேனலுக்கு’ புத்தகம் பற்றி பேட்டி அளித்தார். அப்போது பசவண்ணரை பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறினார்.
அவரது புத்தகத்திலும் பசவண்ணரை திருடன், கொள்ளையன் என்று சித்தரித்து இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த விவகாரம் கர்நாடகாவில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. ரவி ஹஞ்ச் மீது, லிங்காயத் சமூகம் வெகுண்டு எழுந்துள்ளது.
லிங்காயத் சமூகத்தை சேர்ந்த அமைச்சர்கள் எம்.பி.பாட்டீல், ஈஸ்வர் கண்ட்ரே, சரணபிரகாஷ் பாட்டீல், மல்லிகார்ஜுன் உள்ளிட்டோர் ரவி ஹஞ்ச் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசுக்கு நெருக்கடி கொடுத்துள்ளனர். ரவி ஹஞ்ச்சின் உருவ பொம்மையை எரித்து வடமாவட்டங்களின் லிங்காயத் சமூகத்தினர் போராட்டம் நடத்தினர்.
பெங்களூரு ஐகிரவுண்ட் போலீஸ் நிலையத்திலும் அவர் மீது புகார் அளிக்கப்பட்டது.
இந்த பிரச்னை நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்திலும் எதிரொலித்தது.
இதனை தொடர்ந்து பசவண்ணர் பற்றி ரவி ஹஞ்ச் கூறியது தொடர்பான வீடியோக்களை சமூக வலைதளங்களில் இருப்பதை அழிப்பது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதவும், சர்ச்சைக்குரிய பசவ மண்டபம் புத்தகத்தை யாரும் வாங்கவோ, விற்கவோ, படிக்கவோ கூடாது என்பதற்காக, சந்தையில் இருக்கும் புத்தகத்தின் அனைத்து பிரதிகளையும் கட்டாயமாக பறிமுதல் செய்யவும் அமைச்சரவையில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க தலைமை செயலர் ஷாலினிக்கு, முதல்வர் சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.
