ADDED : செப் 24, 2026 12:30 AM

- நமது நிருபர் -
கர்நாடகாவில், தென்மேற்கு பருவமழை குறைந்த அளவே பொழிந்ததால், ஏரிகள், ஆறுகள், நீர்வீழ்ச்சிகளில் நீர்மட்டம் குறைகிறது. இதனால், கடற்கரை உள்ள கடலோர மாவட்டங்களுக்கு, வார இறுதி நாட்களில் சுற்றுலா பயணியர் செல்ல ஆரம்பித்துள்ளனர். கடற்கரைகள், தீவுகளுக்கு படையெடுக்கின்றனர். கடலோர மாவட்டங்களில் உள்ள பிரபலமான தீவுகள் பற்றி சுற்றுலா பயணியருக்கு தெரிந்திருக்கும். ஆனால் அவர்களுக்கே தெரியாத ஏராளமான சிறிய தீவுகளும் உள்ளன. அதில் ஒன்று கெம்மன்னு கிராமத்து தீவு.
உடுப்பி அருகே உள்ள கெம்மன்னு - ஹூடே கிராமங்களுக்கு நடுவில் கெம்மன்னு என்ற தீவு உள்ளது. அப்பகுதி மக்களால், ஜோஸ் தீவு என்றும் அழைக்கப்படுகிறது.
உடுப்பியில் ஓடும் சுவர்ணா, சீதா ஆறுகளின் தண்ணீர், அரபிக்கடலில் கலப்பதற்கு முன், கெம்மன்னு - ஹூடே கிராமங்களுக்கு நடுவில் பல இடங்களில் பிரிந்து, சிறிய தீவுகளை உருவாக்கி உள்ளது. இதில் ஒன்று தான், கெம்மன்னு.
சுற்றிலும் அடர்ந்த தென்னை மரங்கள், சதுப்பு நில காடுகள், அமைதியான ஆறு ஆகியவற்றை கொண்டு, இயற்கையின் சொர்க்கமாக தீவு காட்சி அளிக்கிறது.
தீவை சுற்றியுள்ள சதுப்பு நில காடுகளுக்கு, கயாகிங் என்ற துடுப்பு படகு மூலம் செல்லலாம். படகு சவாரியும் உள்ளது. கெம்மன்னு - ஹூடே கிராமங்களை இணைக்கும் வகையில், ஆற்றின் நடுவில் தொங்கு பாலம் உள்ளது.
இது, சுற்றுலா பயணியரை வெகுவாக கவர்கிறது. தீவு அமைந்துள்ள பகுதியில், தண்ணீர் ஆழம் குறைவாக இருப்பதால் குளித்து மகிழ்வதுடன், குடும்பத்தினருடன் ஓடி, ஆடி விளையாடவும் ஏற்ற இடமாக உள்ளது.
நகர இரைச்சலில் இருந்து வி லகி, ஒரு நாள் அமைதியாக நேரத்தை செலவிட இந்த இடம் ஏற்றது. காலை 9:30 மணி முதல், மாலை 5:00 மணி வரை தீவுக்கு செல்ல அனுமதி உள்ளது. கூட்டமும் இங்கு குறைவாகவே இருக்கும்.
எப்படி செல்வது? பெங்களூரில் இருந்து உடுப்பி, 420 கி.மீ., துாரம். பெங்களூரு மெஜஸ்டிக்கில் இருந்து உடுப்பிக்கு கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ் சேவை உள்ளது. அங்கிருந்து, 13 கி.மீ., தாரத்தில் உள்ள கெம்மன்னுவிற்கு உள்ளூர் பஸ், ஆட்டோ மூலம் செல்லலாம்.
ரயிலில் சென்றால், உடுப்பி ரயில் நிலையத்தில் இறங்கி, அங்கிருந்து செல்லலாம்.
காரில் சென்றால் துமகூரு, ஹாசன், சக்லேஷ்பூர், மங்களூரு வழியாக உடுப்பியை அடைய வேண்டும்.
