கொடவா குடும்ப ஹாக்கி நிறைவு செப்புடி அணி புதிய சாம்பியன்
கொடவா குடும்ப ஹாக்கி நிறைவு செப்புடி அணி புதிய சாம்பியன்
ADDED : ஜன 02, 2026 06:00 AM

குடகில் கொடவா குடும்ப ஹாக்கி விளையாட்டின் நிறைவு போட்டிகள் நடைபெற்றன. அதில், செப்புடி அணி புதிய சாம்பியனாகி உள்ளது.
கர்நாடகாவின் குடகு மாவட்டம் காபி உற்பத்தியில் எந்த அளவுக்கு பெயர் எடுத்து உள்ளதோ, அதே அளவுக்கு ஹாக்கி போட்டிக்கும் பெயர் பெற்றது. இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் கணேஷ், கோல்கீப்பர் சுப்பையா, தற்போதைய இந்திய ஹாக்கி அணி வீரர் எம்.கே.உத்தப்பா உட்பட, பல ஹாக்கி விளையாட்டு வீரர்களை கொடுத்த பெருமை குடகிற்கு உண்டு.
ஹாக்கி வீரர்களை உருவாக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் குடகில் ஹாக்கி போட்டிகள் நடத்தப்படுகின்றன. இந்த ஆண்டுக்கான விளையாட்டு போட்டி கடந்த மாதம், 25ம் தேதி துவங்கியது. குல்லேட்டி, செப்புடி, மண்டேபாண்டா, குப்பண்டா குடும்ப அணிகள் பங்கேற்றன.
நேற்று முன்தினம் நடந்த இறுதி போட்டியில் செப்புடி - குல்லேட்டி அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக நடந்த போட்டியில், 57வது நிமிடத்தில் செப்புடி அணியின் சோமண்ணா ஒரு கோல் அடித்தார். குல்லேட்டி அணியால் கடைசி வரை கோல் அடிக்கவே முடியவில்லை. இதனால், செப்புடி அணி 1 - 0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியனானது.
செப்புடி அணிக்கு இரண்டு லட்சம் ரூபாயும், குல்லேட்டி அணிக்கு ஒரு லட்சம் ரூபாயும் பரிசு வழங்கப்பட்டது. மண்டேபாண்டா, குப்பண்டா அணிகளுக்கு தலா 50,000 ரூபாய் வழங்கப்பட்டது. இறுதி போட்டியை கொடவா ஹாக்கி அகாடமி, ஹாக்கி கூர்க், எம்.படகா விளையாட்டு பொழுதுபோக்கு அமைப்பு, மூர்நாடு கல்வி நிறுவனங்கள் இணைந்து நடத்தின
- நமது நிருபர் - .

