ADDED : ஜன 02, 2026 06:02 AM

பி.சி.சி.ஐ., எனப்படும், இந்திய கிரிக்கெட் வாரியம் சார்பில், 'விஜய் ஹசாரே டிராபி' உள்ளூர் ஒரு நாள் கிரிக்கெட் தொடர், கடந்த மாதம், 24ம் தேதி துவங்கியது. இந்த ஆண்டு நடக்கும் தொடருக்கு வழக்கத்தை விட ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. அதற்கு காரணம், பிரபல கிரிக்கெட் வீரர்களான விராட் கோலியும், ரோகித் சர்மாவும் விளையாடுவதே.
முதல் போட்டி டில்லி - ஆந்திரா அணிகளுக்கு இடையே நடந்தது. இந்த போட்டியை பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடத்த கர்நாடக கிரிக்கெட் அசோசியேஷன் முயற்சி எடுத்தது. இந்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்ததால், பெங்களூரு புறநகரில் அமைந்துள்ள பி.சி.சி.ஐ.,யின் சென்டர் ஆப் எக்சலன்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் போட்டி நடத்தப்பட்டது.
மரத்தில் ரசிகர்கள் இப்போட்டியை காண்பதற்கு ரசிகர்களுக்கு அனுமதியில்லை. அதனால், கோலி விளையாடுவதை பார்க்க முடியாமல் ரசிகர்கள் தவித்தனர். சிலர் மரங்களின் மீது ஏறி நின்று ஆபத்தான முறையில் கோலியின் ஆட்டத்தை பார்த்து ரசித்தனர். இது தொடர்பான படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகின. இப்போட்டியிலும், 101 பந்தில் 131 ரன்கள் எடுத்து கோலி அசத்தினார்.
அதேபோல, அடுத்து டில்லி - குஜராத் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியிலும் கோலி, 77 ரன்கள் அடித்தார். இந்த போட்டியையும் ரசிகர்கள் மரத்தில் நின்றவாறே பார்த்து ரசித்தனர். இதையடுத்து, மூன்றாவதாக வரும், 6ம் தேதி ரயில்வே அணி - டில்லி அணி மோதும் போட்டியில், விராட் கோலி விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்தது.
கட்டாயமில்லை அதற்கு காரணம், விஜய் ஹசாரே டிராபி தொடரில், கோலி இரண்டு போட்டிகளில் மட்டுமே கட்டாயம் விளையாட வேண்டும் என்று பி.சி.சி.ஐ., கூறியது. அதன்படி, அவரும் இரண்டு போட்டிகளில் விளையாடி விட்டார். எனவே, மூன்றாவது போட்டியில் கோலி விளையாட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
அதுபோல, இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் ஒரு நாள் போட்டி வரும், 11ம் தேதி துவங்குகிறது. இப்போட்டியில் கோலி இடம்பெறுவார் என்று தெரிகிறது. இந்த போட்டிக்கு பயிற்சி பெறுவதற்காக கோலி உள்ளூர் போட்டிகளில் விளையாட மாட்டார் என, செய்தி பரவியது. இது, பெங்களூரில் உள்ள கோலி ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியது.
கிங் கோலி 'கிங் கோலியின் ஆட்டத்தை எங்களால் பார்க்க முடியாதா' என ரசிகர்கள் விரக்தி அடைந்தனர். இந்நிலையில், வரும் 6ம் தேதி ரயில்வே அணியுடன் நடக்கும் ஆட்டத்தில் டில்லி அணி சார்பில் கோலி நிச்சயம் பங்கேற்பார் என்று, டில்லி மாவட்ட கிரிக்கெட் அசோசியேஷன் தெரிவித்து உள்ளது.
இதனால், கோலி மூன்றாவது முறையாக போட்டியில் பங்கேற்பது உறுதியாக உள்ளது.
மேலும், லிஸ்ட் 'ஏ' கிரிக்கெட்டில் இரண்டாவது இன்னிங்சில், 330 போட்டிகளில் பங்கேற்று 16,000 ரன்களை குவித்து புதிய சாதனையை அவர் படைத்து உள்ளார். 391 போட்டிகளில் பங்கேற்று 16,000 ரன்களை கடந்த கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சினின் சாதனையை முறியடித்து உள்ளார்.
ஆக... எது எப்படியோ, பெங்களூரின் செல்லப்பிள்ளை கோலி, மூன்றாவது முறையாக நம் மண்ணில் விளையாடும் விஷயம், அவரது ரசிகர்களின் காதில் தேன் வந்து பாய்வதாக அமைந்து உள்ளது.
- நமது நிருபர் -:

